பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதில் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பாக மட்டும் மொத்தம் 16 பிரிவுகளில் 117 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவிற்கான தகுதிச்சுற்று நடைபெற்றது. இந்த சுற்றில் ஒவ்வொரு துப்பாக்கி சுடும் வீரருக்கும் 30 முறை வாய்ப்பளிக்கப்படும். பின்னர், இந்த தகுதித் சுற்றில் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறும் அணிகள் பதக்கப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் தங்கப் பதக்கத்துக்காகவும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த அணி வெண்கலப் பதக்கத்திற்காகவும் போட்டியிடும்.
இப்போட்டியின் முடிவில் சீனா 632.2 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், தென் கொரியா 631.4 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும் இருந்தது. இந்த பட்டியலில் கஜகஸ்தான் 630.6 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், ஜெர்மனி 629.7 புள்ளிகளை பெற்று 4வது இடத்தை பெற்றது.
இந்த போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் சந்தீப் சிங் ஜோடியும், ரமிதா மற்றும் பபுதா அர்ஜூன் ஜோடியும் பங்குபெற்றனர். இந்த சுற்றில் ரமிதா- பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6ம் இடத்தை பிடித்தது. மற்றொரு ஜோடியான இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளுடன் 12வது இடத்தை பிடித்தது.
இதனையடுத்து தங்கப் பதக்கத்திற்காக நடைபெற்ற சுற்றில் 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் சீனா வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவிற்கான தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சீனா சாதனை படைத்துள்ளது. ஜெர்மனியை 17-5 என்ற கணக்கில் வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்த கஜகஸ்தான் வெண்கல பதக்கம் வென்றது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்: முதல் நாளில் இந்திய வீரர்கள் யார் யாருக்கெல்லாம் போட்டி?