ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா கடந்த மார்ச் 11ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, கோயிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது, சாமி சப்பரம் செல்லும் வழிநெடுக்க பக்தர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனின் சப்பரம், கடந்த 19ஆம் தேதி கோயிலை வந்தடைந்தது. பின்னர், குண்டம் விழாவை வரவேற்கும் விதமாக கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்`றன.
விழாவை முன்னிட்டு பழங்குடி மக்களின் பீனாட்சி வாத்தியத்துடன் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன. மேலும் கோயில் வளாகம் முழுவதும் அலங்கார பந்தல்கள், வண்ண மின்விளக்குகள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கியது.
அதற்காக பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டு ஆகியவற்றைக் கொண்டு கோயில் முன் தீக்குண்டம் வார்க்கப்பட்டது. மேலும், பக்தர்களின் வசதிக்காக தீக்குண்டம் 8 அடி நீளத்திலும், 4 அடி அகலத்திலும் சமன்படுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு, வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைக் காண அதிகாலை 4 மணியளவில் வந்த பக்தர்கள், படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகு மாரியம்மனுக்குப் பூஜைகள் செய்து, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் கோயில் அர்ச்சகர் பார்த்திபன் குண்டம் அருகே கற்பூரம் ஏற்றி பூஜை செய்து, மலர்களைத் தூவி முதலில் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பதை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உள்துறை செயலாளர் அமுதா, பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி ஆகியோர் குண்டம் இறங்கினார். அவர்களைத் தொடர்ந்து பல துறை சார்ந்த அதிகாரிகள், காவலர்கள், இளைஞர்கள், திருநங்கைகள், வனத்துறையினர் மற்றும் கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனை தரிசித்தனர்.
குறிப்பாக விழாவை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ஈரோடு, கோவை, திருப்பூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு கருதி, சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 3 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குதலும், அதன் பிறகு கால்நடைகள் குண்டம் இறங்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு!