தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள அருள் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதற்காக, கடந்த 10 நாட்களுக்கு மேல் பக்தர்கள் விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்காக பால்குடம், தீர்த்தக்குடம் உள்ளிட்டவை எடுத்து அவரவர்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும், இக்கோயிலில் இருக்கும் தெய்வங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக பக்தர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேமிதங்களை செலுத்துவதற்காக பால்குடம், தீர்த்த குடங்களை எடுத்துக் கொண்டு, பால விநாயகர் கோயிலில் இருந்து குருநாதர் சக்தியம்மா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். நகரின் முக்கிய நீதி வழியாக வலம் வந்த பக்தர்கள் மீண்டும் கோயிலை சென்றடைந்தனர்.
இதையும் படிங்க: கும்பகோணம் நாச்சியார் கோயிலில் கல்கருட சேவை திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
பக்தர்கள் கொண்டு வந்த நேமிதங்களைக் கொண்டு, முப்பெரும் தேவியர் பவானி அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இந்த சிறப்பு அபிஷேகத்திற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு இருந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள மற்ற தெய்வங்களுக்கும் அபிஷேக பூஜைகள் நடந்தது.
அந்த வகையில், கோயில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், வள்ளி, தெய்வானை, சமேத கல்யாண சுப்பிரமணியர், பதினெட்டாம் படி கருப்பசாமி, பவானி பத்ரகாளி அம்மன், மகாகாளியம்மன், பேச்சியம்மன், புற்றுக்காளி, நாக காளி, சூலக்காளி, ரத்தக்காளிக்கு ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்ட பெரிய தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் அம்மன்களுக்கு திருவிளக்கு பூஜையும், அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு கோயில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் வருஷாபிசேக விழாவை முன்னிட்டு சிறப்பு அருள் வாக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஒரு தேங்காய் ரூ.62,000.. போடி முருகன் கோயிலில் திகைத்த பக்தர்கள்!