திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மலை அடிவாரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் இன்று (ஜன.25) நடைபெற்றது.
இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வயானை சமேதராக அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், வருகிற 28 ம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை, சமேதர் முத்துக்குமார சுவாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து, 6ஆம் நாளான நேற்று வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பழனிக்குப் பாதயாத்திரையாக வருகை புரிந்த திரளான பக்தர்கள், மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து, மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி உற்சாகமாகத் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடி தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவால் காலமானார்..