தமிழ்நாடு: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
வேலூர் கோயில்களில் வெள்ளிக் கவசம்: அந்த வகையில், வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு துளசி மாலைகள், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைகளும் நடந்தது. மேலும், பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமாக அளிக்கப்பட்டது. இதே போன்று வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலிலும் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் உடன் வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகள் நடந்தது.
இதையும் படிங்க: 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்! திருச்சி மலைக்கோட்டை விநாயகரை காண வந்த மலேசிய பயணிகள்!
போடிநாயக்கனூரில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில். சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் சீனிவாச பெருமாளுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பல்வேறு மலர்களாலான தும்பிக்கை மாலை, ஏலக்காய் மாலை மற்றும் தாமதி பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நட்சத்திர தீபம் ஏற்றி சீனிவாச பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது. அருகில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.