ஹைதராபாத்: கார்கில் போர் முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு வரையிலான பல பதற்றங்கள், பாகிஸ்தான், சீனா எல்லை அச்சம், அவ்வப்போது ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என எப்போதும் ஒரு பரபரப்பிலே காணப்படும் ஜம்மு காஷ்மீரில் தான் இன்று அமைதியான முறையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது.
அரசியலமைப்பு பிரிவு 370 சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு சந்தித்த 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான 55 சதவீத வாக்குப்பதிவும், அம்மாநிலத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் மேம்பாட்டிற்கிடையே நடைபெற்ற அமைதியான வாக்குப்பதிவும் உச்ச நீதிமன்றத்தை சற்று கவனிக்க வைத்துள்ளது எனலாம். இதனையடுத்து, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். இதன்படி, செப்டம்பர் 19, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இவ்வாறு பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. இவை அனைத்திற்கும், ஜம்மு காஷ்மீர் மக்கள், புறக்கணிப்புக்கு பதிலாக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை 55 சதவீதம் அளவு நிறைவேற்றியதே காரணம் என்கிறார், ராஜீவ் குமார்.
இருப்பினும், சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பிர் பஞ்சால் பகுதிக்கு தெற்கே பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து, ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைவதும், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவதும் நடந்திருப்பது மக்களிடையே சில பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. இருப்பினும், நமது பாதுகாப்பு படை வீரர்கள் 365 நாட்களும் 24 மணி நேரமும், பாகிஸ்தானின் பயங்கரவாத சூழ்ச்சிகளிடம் இருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்திட வேண்டாம்.
ஏனென்றால், காஷ்மீர் சர்ச்சைக்குரியது, இந்தியாவிற்கு எதிரானது என்ற பாகிஸ்தானின் கூற்று இன்றும் அப்பகுதியில் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் இஸ்லமாபாத்தை சிலர் விரும்புவதாகவும், காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுக்கு வர விரும்புவதாகவும் சில பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து மக்களிடையே விஷமத்தை பரப்பி வருவதாக பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.
இருப்பினும், தற்போது பாகிஸ்தான் மக்களில் பலரும் இந்தியா திரும்ப விருப்பப்படுவதாகவும், காரணம், எல்லை பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் உணவு ஆகியவை எனவும் இந்திய அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, முன்னாள் ராணுவ ஜெனரல் வேத் மாலிக், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்த அவசரப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஒரு சில பயங்கரவாத அமைப்புகளை பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள மாலிக், தேர்தலை விட ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம் என தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தலை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என மாலிக் கூறியுள்ள நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது என்பதே அரசியல் கட்சிகளின் கருத்தாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமையில், பாதுகாப்புப் படையினரின் அரணுக்குள், ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயகக் கடமை எந்தவித சிதறலும் இன்றி நடைபெறும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!