கேப்டன் கூல், மாஸ்டர் மைண்ட் என்றெல்லாம் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தல தோனி கிரிக்கெட்டில் கொடி கட்டி பரப்பதை போல பல தொழில்களிலும் சாதித்து வருகிறார். ஜிம் முதல் பட தயாரிப்பு நிறுவனம் வரை என அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராகவும் இருந்து வருகிறார். கிரிக்கெட்டை தவிர்த்து எம்.எஸ் தோனி செய்து வரும் தொழில்கள் பற்றி பார்க்கலாம்..
செவன்: விளையாட்டு துறைக்கான ஜெர்ஸிகள், காலணிகள், ஷூ உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் ரிதி குரூப் உருவாக்கிய 'செவன்' என்னும் லைப்ஸ்டைல் பிராண்டின் முக்கிய பங்குதாரராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.
தோனியை பிராண்ட் அம்பாசிடராக இருக்க செவன் நிறுவனம் அணுகிய போது, இந்த டீலை வர்த்தகமாக மாற்றினார். சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள காலணி வர்த்தகத்தை செவன் பிராண்டில் உருவாக்கி தனக்கு சொந்தமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்கானிக் விவசாயம்: பிரபலமான பிராண்டுகளில் முதலீடு செய்வதைத் தவிர, தனது நேரத்தையும் பணத்தையும் இயற்கை விவசாயத்தில் முதலீடு செய்துள்ளார் எம்.எஸ் தோனி. விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள அவரது ஈஜா பண்ணையில் (Eeja Farms) சுமார் 40 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார்.
தனது பண்ணையில் வளர்ந்த ஸ்ட்ராபெர்ரி செடியில் இருந்து, ஸ்ட்ராபெர்ரி பழத்தை உண்பது போல கடந்த 2021ம் ஆண்டு இன்ஸ்டாவில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், ஆடு மற்றும் மாடுகளை பண்ணையில் வளர்த்து வருகிறார்.
மஹி ஹோட்டல்: எம்.எஸ். தோனியின் பிரபலமான வணிக முதலீடுகளில் இந்த ஹோட்டலும் ஒன்று. 'மஹி ரெஸிடன்சி' என்ற பெயரில் ராஞ்சியில் செயல்பட்டு வருகிறது. ஹோட்டல் புக்கிங்கிற்கான பிரபல முக்கிய தளங்களில் மஹி ரெஸிடன்சியை காண முடியும்.
எம்.எஸ் தோனி ஸ்போர்ட்ஸ் ஃபிட்: இன்றளவும், தோனியின் பிட்னஸ் பற்றி பேசாதே ஆட்களே இருக்க முடியாது. இவருக்கும், ஜிம்மிற்குமான காதல் விவகாரம் முதலீடாக உருவமெடுத்து வெற்றி நடை போட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்போர்ட்ஸ்ஃபிட் வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் (SportsFit World Pvt. Ltd.) என்ற பெயரில் ஜிம்களை நடத்தி வருகிறார் தோனி.
சென்னையின் எஃப் சி: தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்குவதற்கு முன்பு, தனது பள்ளி அணியில் கோல்கீப்பராக விளையாடினார் என்பது அனைவரும் அறிந்ததே. கால்பந்து விளையாட்டு வீரராக ஆகவேண்டும் எனும் தோனியின் ஆசை வழி மாறி கிரிக்கெட்டிற்கு சென்ற நிலையில், இந்தியன் சூப்பர் லீக், சென்னையின் எஃப்சி கால்பந்து அணியை அபிஷேக் பச்சன், விட்டா டானியுடன் இணைந்து தோனி வாங்கியுள்ளர்.
ராஞ்சி ரேஸ்: கிரிக்கெட், கால்பந்து எனத் தொடங்கி ஹாக்கி அணியிலும் தோனி முதலீடு செய்துள்ளார். ஜார்கண்டை தளமாகக் கொண்ட, ராஞ்சி ரேஸின் இணை உரிமையாளராக தோனி உள்ளார். இந்த அணி ஹாக்கி இந்தியா லீக்கில் (Hockey India League) விளையாடுகிறது.
7inkBrews: உணவு மற்றும் திண்பண்டங்கள் உற்பத்தி நிறுவனமான 7inkBrewsல் முக்கிய பங்குதாரராக தோனி இருக்கிறார். புகழ்பெற்ற தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் மற்றும் தோனியின் ஜெர்ஸி நம்பரான 7 வைத்து 'காப்டர் 7' என்ற பெயரில் சாக்லேட் மற்றும் ஜூஸ்களை விளம்பரப்படுத்தியது.
தோனி எண்டர்டெயின்மெண்ட்: எம்.எஸ் தோனியும் , அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தமிழில், லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில், நடிகர் ஹாரிஸ் கல்யாண், நடிகை இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் இப்படம் வெளியானது.
இதையும் படிங்க: புது ஹேர்ஸ்டைலில் மிரட்டும் தோனி! ஐபிஎல் சீசனுக்கு ரெடியா?
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்