தைபே: தைவான் நாட்டில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு தைவானில் பெய்பின் தெரு, ஹுவாலியன் நகரம், ஹுவாலியன் கவுண்டி உள்ளிட்ட பகுதிகளில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தைவான் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் உருக்குலைந்தன. இதையடுத்து ஜப்பான் நாட்டின் இரண்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரையில் இன்று (புதன்கிழமை) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவான் நாட்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், தைவான் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்நாட்டில் கட்டடங்கள் அனைத்தும் குலுங்கின. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் உருக்குலைந்தன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விபத்தில் ஹுவாலியன் கவுண்ட் பகுதியில் இதுவரை சுமார் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
காலை எட்டு மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹுவாலியின் பகுதியில் இருந்த ஐந்து மாடி கட்டடத்தின் முதல் தளம் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில், அக்கட்டடம் 45 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதில், இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏராளமான பொதுமக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதோடு, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இப்பணியில் இணைந்துள்ளனர்.
இருபத்து மூன்று மில்லியன் தொகை கொண்ட மக்கள் வசிக்கும் குட்டி தீவு ஆகிய இந்நாட்டில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், தைபே மாநகரின் முக்கிய சாலைகள் சேதமடைந்த நிலையில், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த நிலநடுக்கத்தால், தைவான் அருகே பசிபிக் பெருங்கடலில் குயிஷான் தீவின் பெரும் பகுதி உடைந்து கடலுக்குள் மூழ்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தைவானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பாக, அந்நாட்டின் நிலநடுக்க கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவலில், 'தைவானில் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகவும்; அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், '7.4 ஆகவும்' பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் சுமார் 18 கிலோமீட்டர் (11.1 மைல்) தூரத்தில், சுமார் 35 கிலோமீட்டர் (21 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகள் இதன் அதிர்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் ஒன்று 6.5 அளவு மற்றும் 11.8 கிலோமீட்டர் (7 மைல்) ஆழத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்க வாய்ப்புகள் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: புயல், சுனாமியை இப்படித்தான் கணிக்கிறார்கள்! - அதிசயிக்க வைக்கும் விஞ்ஞானிகள்