வியன்டியான்: "உலக நாடுகளுக்கு இடையேயான சிக்கல்களை பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ரீதியிலான முயற்சிகள் மூலமே தீர்க்க முடியும்,"என்று லாவோசில் நடைபெற்ற 19ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"இது போருக்கான சகாப்தம் அல்ல, போர்களத்தில் இருந்து சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காது. உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம் ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக திகழ்கிறது. மனித நேயத்தின் மூலம் இந்த சவாலை எதிர்கொள்வதற்கு படைகளுக்கு மத்தியில் கூட்டாண்மை தேவை. இறையாண்மை, பிராந்திய ஒற்றுமை,சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் மோதல்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு தெற்கில் உள்ள நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மோதல்கள்,தெற்கில் உள்ள நாடுகளின் வளர்ச்சி மற்றும் வலுவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இதையும் படிங்க : இந்தியா-ஆசியான் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்த 10 முக்கிய அம்சங்கள்
தெற்கு சீனா கடல் பகுதி பாதுகாப்பு என்பது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் ஒட்டு மொத்த வலுவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடல் பயணம் மற்றும் வான்வெளி ஆகியவற்றில் சுந்திரமான தன்மையை உறுதி செய்ய கடல் பகுதி நடவடிக்கைகள் அனைத்தும் கடல் சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும்,"என்று கூறினார்.
யாகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டார். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபரேஷன் சத்பவ் என்ற செயல்பாட்டின் மூலம் மனித நேய உதவிகளை இந்தியா வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆசிய நாடுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஐந்து அம்ச திட்டம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கையில் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு முக்கியமாக கருதப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 19 மாநாடுகளில் 9 முறை பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். இன்றைய மாநாடு தொடங்கப்பட்டதும் பிரதமர் மோடி முதன் முதலாக பேச அழைக்கப்பட்டார்.