டாக்கா: வங்கதேசத்தில் பாகிஸ்தானுடனான போரில் உயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியில் 30 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு எதிராக நாட்டில் உள்ள மாணவ அமைப்பினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 'பாகுபாடு எதிர்ப்பு மாணவர் இயக்கம்' என உருவாகி ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கடந்த மாதம் நாடு முழுவதும் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதில், தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 4) பலியானவர்களுக்கு நீதி கேட்டும், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்குள்ளும் ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
நேற்றைய தினம் தொடங்கிய போராட்டம் இன்று பிரதமர் அலுவகம் வரை தொடர்ந்தது. இதற்கு மத்தியில் இன்று வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அவர் ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் இருந்தில் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் டெல்லியை நோக்கி வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடிய செய்தியை அறிந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாக்காவில் உள்ள இந்திராகாந்தி கலாச்சார மையம் ( Indira Gandhi Cultural Centre (IGCC))மற்றும் பங்கபந்து நினைவு அருங்காட்சியகம்( Bangabandhu Memorial Museum) சேதப்படுத்தியுள்ளனர்.
இன்று டாக்காவின் முக்கிய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். இதில், பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தையும் சேதப்படுத்தியதாக டாக்காவின் ட்ரிப்யூன் (Tribune) செய்தித்தாள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 1975 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்து படுகொலை செய்யப்பட்ட ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி கலாச்சார மையத்தையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேதப்படுத்தியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைக்கால அரசு: இந்நிலையில், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்துள்ளார். மேலும், அனைவரின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். மாணவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்திராகாந்தி கலாச்சார மையம் : 2010 இல் தொடங்கப்பட்ட இந்த மையத்தில், கலாச்சார நிகழ்ச்சிகள், கலாச்சார கருத்தரங்குகள், யோகா, இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனங்கள் நடைபெறுவதுடன், இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான கலாச்சார இணைப்புகளை ஊக்குவிக்கிறது. இந்திய கவுன்சலின் கலாச்சார மையமான இந்த மையம் கலை, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் 21 ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை.. பிரதமருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 91 பேர் பலி - Bangladesh Violence