அடிஸ் அபாபா: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி மண்ணில் புதைந்தனர்.
மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண் இடுக்குகளில் சிக்கி உயிரிழந்த, 157 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 148 ஆண்கள் மற்றும் 81 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கோபா மண்டலத்தில் கெஞ்சோ ஷாச்சா பகுதியில் இந்த பேரிடர் சம்பவம் நடந்துள்ளது. இந்த இடம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட போது அதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க சென்றவர்கள் மீது இரண்டாவது முறையாக மண் சரிந்த காரணத்தால் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக எத்தியோப்பியா உள்ளது.
மொத்தம் 120 மில்லியன் மக்கள் அங்கு வசிப்பதாகவும், வெள்ளம் மற்றும் வறட்சி என காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச சமூக சங்கங்கள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: நேபாளம் விமானம் விபத்து! 5 பேர் சடலம் மீட்பு எனத் தகவல்! - Nepal Plane Crash