அமெரிக்கா: அமெரிக்கா நாட்டில் பர்ட்யு பல்கலைக்கழகத்தில் (purdue university) படித்து வந்த இந்திய மாணவர் மேற்கு லஃபயேட் என்ற பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா நாட்டின் பர்ட்யு பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் நீல் ஆச்சார்யா. அவரை காணவில்லை என அவரது தாயார் கௌரி ஆச்சார்யா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் சிகாகோவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், "எனது மகன் நீல் ஆச்சார்யா கடந்த ஜனவரி 28ஆம் தேதி (காலை 12.30 மணி) முதல் காணவில்லை. அவர் அமெரிக்காவில் உள்ள பர்ட்யு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரை கடைசியாக டாக்ஸி ஓட்டுநர் பர்ட்யு பல்கலைக்கழகத்தில் இறக்கி விட்ட போது பார்த்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சிகாகோவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் பர்ட்யு பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் நீல் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று காலை அல்லிசன் சாலையில் மேற்கு லஃபயேட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இறந்தவர் நீல் ஆச்சார்யா என பர்ட்யு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்தனர். முன்னதாக கடந்த வாரம் மற்றொரு இந்தியக் கல்லூரி மாணவர் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கொடூரமான முறையில் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் மற்றொரு அமெரிக்க மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு! என்ன நடந்தது?