சிகாகோ : அமெரிக்காவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். சிகாகோ அடுத்த ஜாய்லாட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து திங்கட்கிழமை அதே பகுதியில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு நாட்கள் அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர் விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ரோமியோ நான்சே என்றும் என்ன காரணத்திற்காக அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து பொது எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடுகள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. துப்பாக்கி கலாசாரம் அங்கு தீவிரமடைந்து வரும் நிலையில் பொது வெளியில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்கின்றன.
டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக கூறப்படுகின்றன. 21 வயது குறைவான நபர்கள் துப்பாக்கி வாங்க அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த அதிபர் பைடன் தலைமையிலான அரசு முன்மொழிவுகளை கொண்டு வந்தாலும் போதிய ஆதரவு இல்லாததால் சட்ட முன்மொழிவுகள் நீர்த்துப் போவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சீனா நிலநடுக்கம் எதிரொலி! தலைநகர் டெல்லியில் நில அதிர்வு!