லண்டன்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவில் உள்ள நீதிமன்றத்தில் ஜூலியன் அசாஞ்சே ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜூலியன் அசாஞ்ச் கடந்த 2006ஆம் ஆண்டில் விக்கி லீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் போரில் அமெரிக்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக ஜூலியன் அசாஞ்சேவை குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. பின்னர் பாலியல் குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லை என வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது.
பின்னர் 2012ஆம் ஆண்டு மீண்டும் ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் மீண்டும் சர்வதேச அளவிலான பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.
ஈகுவடார் அரசும் அவருக்கு தன்சம் அளிப்பதாக ஒப்புக் கொண்டது. கடந்த 2019ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜூலியன் அசாஞ்சேவுக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து போலீசார், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தி இருந்தத நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது.
அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என அஞ்சிய ஜூலியன் அசாஞ்ச் இங்கிலாந்து அரசின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே மற்றும் அமெரிக்கா அரசுடன் சுமூக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்றும் ஏறத்தாழ 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
அதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக லண்டன் சிறையில் இருந்ததை மேற்கொள் காட்டிய ஜூலியன் அசாஞ்சே தரப்பு லண்டன் சிறையில் இருந்ததை கணக்கில் எடுத்துக் கொண்டு தனக்கு விடுதலை வழங்க வேண்டும் என முறையிட்டது. இதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதாகவும் அது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூலியன் அசாஞ்சே லண்டன் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார். தொடர்ந்து அவர் லண்டனில் இருந்து கிளம்பிய நிலையில், வரும் புதன்கிழமை அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கே செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி ஐசியுவில் அனுமதி! உண்ணாவிரதத்தால் உடல் நலக்கோளாறு! - Atishi Admitted in hospital