ஐதராபாத் : அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவை சேர்ந்த சமீர் கமாத் என்ற இளைஞர் அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள பர்தூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு நிறைவு செய்து உள்ளார். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பித்து தொடர்ந்து கல்வி பயின்று வந்து உள்ளார்.
2025ஆம் ஆண்டு வரை அவரது கலவிக் காலம் உள்ள நிலையில், பல்கலைக்கழக பகுதியில் அவர் தங்கி உள்ளார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் வில்லியம்ஸ்பார்ட் பகுதியில் சமீர் கமாத்தின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. செவ்வாய்க்கிழமை அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் அடிப்படையில், மாணவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பது என்பது 5வது நிகழ்வாகும். இதற்கு முன் இதே பர்தூ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நீல் ஆச்சர்யா என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனது மகன் மாயமானது குறித்து தாய் அளித்த புகாரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நீல் ஆச்சர்யாவை சடலமாக மீட்டனர். கடந்த வாரம் ஒகியோ மாகாணத்தில் 19 வயது ஸ்ரேயஸ் ரெட்டி என்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2024ஆம் ஆண்டில் அடுத்தடுத்து 5 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீண் வெறுப்பு காரணமாக இந்தியர்கள் கொல்லப்படுகின்றனரா என்கிற சந்தேகம் நிலவும் நிலையில், அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க : மே 10.க்குள் இந்திய ராணுவம் வெளியேற்றம் - பின்வாங்குகிறாரா மாலத்தீவு அதிபர்! சூட்சமம் என்ன?