ஹாங்காங்: சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள ஹாங்காங் நகரில் 2019ஆம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக 'நியூஸ் ஸ்டேன்ட்ஸ்' என்ற பத்திரிக்கை தொடர்ந்து செய்திகளை வெளியிட்டது. இது சர்வதேச அளவில் சீன அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து செய்திகளை வெளியிட்ட நியூஸ் ஸ்டேன்ட்ஸ் அலுவலகத்தில் சீன அரசு சோதனை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து நியூஸ் ஸ்டேன்ஸ் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் சுங் புய்-குயென், முன்னாள் பொறுப்பாசிரியர் பேட்ரிக் லாம் ஆகியோருக்கு எதிராக தேசதுரோக வழக்கை சீன அரசு பதிவு செய்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 2022ஆம் ஆண்டு இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய 14 பேர் கைது
இருவர் மீதும் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கின் மீதான விசாரணை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. அப்போது சுங் புய்-குயென், பேட்ரிக் லாம் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்ரி யூ, "பத்திரிகையாளர்கள் என்ற முறையில் இருவரும் தங்கள் கடைமையை செய்ததாகவும், அதன்படி அரசுக்கு ஆதரவு மற்றும் எதிர்தரப்பினரை சந்தித்து கருத்துகளை பிரசுரித்தனர்" எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இருவரும் தாக்கல் செய்த மனுவில், 'தாங்கள் செய்தியாளர்களுக்கான பணியில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு எளிமையான தண்டனை அளிக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்தில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில் இருவருக்கும் எதிரான தேசத்துரோக வழக்கில் ஆதாரங்கள் உள்ளதாகவும், இருவரும் குற்றம் இழைத்திருப்பதாகவும் நீதிபதி குவாக் வை-கிங் தீர்ப்பளித்தார். 11 கட்டுரைகளில் தேசத்துக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாகவும், சீன அரசு மற்றும் ஹாங்காங்க் அரசுக்கு எதிரான ஒரு கருவியாக ஸ்டேன்ட் நியூஸ் செயல்பட்டது என்றும் நீதிபதி கூறினார்.
அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியாக உள்ளது. தேசதுரோக வழக்கின்படி அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 640 அமெரிக்க டாலர்கள் அபராதமும் செலுத்தும்படி உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.