சான் பிரான்சிஸ்கோ: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்ட அவர், துபாய் வழியாக அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நடிகர் நெப்போலியன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்றார். இதனையடுத்து கும்ப மரியாதை, தமிழர் முறைப்படி ஆரத்தி எடுத்தும், 'செம்மொழியாம் எம் தமிழ் மொழி' என்ற பாடலுக்கு நடனமாடியும் தமிழர்கள் சார்பில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க வாழ் தமிழர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அமெரிக்காவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு...#CMMKSTALIN | #TNDIPR | #CMStalinInUS@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @TRBRajaa@Guidance_TN pic.twitter.com/N6jtJoR5zq
— TN DIPR (@TNDIPRNEWS) August 29, 2024
பயணத்திட்டம் என்ன? சான் பிரான்சிஸ்கோவில் இன்று(வியாழக்கிழமை) நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். தொடர்ந்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகிறார்.
அதன் பின்னர் செப்.2-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர், செப்டம்பர் 11 வரை அங்கே தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். குறிப்பாக அங்கு 'பார்ச்சூன் 500' பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக கலந்துரையாட இருக்கிறார்.
இதனையடுத்து செப்டம்பர் 7 ஆம் தேதி 'வணக்கம் அமெரிக்கா' என்ற அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கிறார். இதில் பல்வேறு தொழிலதிபர்கள், சர்வதேச தமிழ் பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. மீண்டும் செப்டம்பர் 12 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.
இதையும் படிங்க: மருத்துவக் கனவை நனவாக்கிய தையல் மெஷின்.. “நீட் தேர்வு கடினமில்லை”.. எம்பிபிஎஸ் மாணவரின் முதல் உச்சம்!