புதுடெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வ பயணமாக வரும் வெள்ளிக்கிழமை இலங்கை புறப்பட்டு செல்கின்றார். இலங்கை அதிபர் அனுரா குமாரா திசநாயகேவை அவர் சந்தித்துப் பேச உள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், "இந்தியாவின் அண்டை நாடு முதன்மை கொள்க, பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்பதற்கு ஏற்ப இருநாடுகளுக்கு இடையே பரஸ்பரம் பயன்களுக்கான நீண்டகால நட்புணர்வை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும்," என்று கூறினர்.
திசநாயகே இலங்கை அதிபராக பதவியேற்ற பின்னர் இலங்கை-இந்தியா இடையே நடைபெறும் உயர் மட்ட அளவிலான சந்திப்பு இதுவாகும். மார்க்சிஸ்ட் ஆட்சியாக புதிய வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்கும் இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது என்ற கடமையை உறுதி செய்யும் வகையில் இந்தியாவுக்கு இது மதிப்புமிக்க வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.
இலங்கையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது உலக நாடுகளிலேயே முதலாவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா திசநாயகேவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியாவின் அண்டை நாடுகளான மாலத்தீவு, வங்கதேசம் ஆகியவற்றில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு மாறான வெளியுறவு கொள்கையை கடைபிடிக்கும் நிலையில் இலங்கையும் அது போல மாறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் அங்கு ஆட்சி மாற்றம் நேரிட்ட பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு உடனடியாக பயணம் மேற்கொள்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேரை விடுவிக்கக் கோரி அண்மையில் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதுடன் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இலங்கை அதிகாரிகளால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதற்கு வன்மையான கண்டனத்தையும் ராகுல் காந்தி பதிவு செய்திருந்தார். இது தவிர வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தியா-இலங்கை இடையே மீனவர் பிரச்னை என்பது நீண்டகாலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் தங்கள் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிப்பதாக இலங்கையின் வடக்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சூழலில் இலங்கை செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என்று அதிபர் திசநாயகேவிடம் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்ப்படுகிறது. அதே போல எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படாதவாறு அவர் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.