ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என லிபரல் கட்சி எம்பிக்கள் 24 பேர் கொடி தூக்கியுள்ளதாக சிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
கனடாவின் பாராளுமன்ற வளாகத்தில் லிபரல் கட்சி எம்பிக்களுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துப் பேசினார். வாரம் தோறும் நடைபெறும் இந்த சந்திப்பு நேற்றும் வழக்கம் போல் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 24 எம்பிக்கள் கையெழுத்திட்ட ஆவணத்தை பிரிட்டிஷ் கொலம்பியா எம்பி பேட்ரிக் வெய்லர் வெளியிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிடக்கூடாது என்று வலியுறுத்தப்படுவதைப் போல ட்ரூடோ மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் அதிருப்தி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
மூன்று மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் ஒவ்வொரு எம்பியும் இரண்டு நிமிடங்கள் உரையாற்றினர். வரும் தேர்தலுக்கு முன்பு ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. அதிருப்தி எம்பிக்கள் தவிர பிற எம்பிக்கள் ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இது குறித்து பேசிய கனடா குடியுரிமைத்துறை அமைச்சர் மார்க் மில்லர்,"இது போன்று உட்கட்சியில் அதிருப்தியான சூழல் இருப்பது உண்டு. அத்தகையோர் வெளியேற்றப்பட வேண்டும்.இது மிகப்பெரிய அச்சுறுத்தல் அல்ல,"என்று கூறினார்.
கனடாவின் அரசியலில் தற்போது நேரிட்டுள்ள அரசியல் விரிசலுக்கு மூலகாரணம் இந்தியா-கனடா இடையே எழுந்த பதற்றமான சூழல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியிலான உறவு மோசமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் லிபரல் கட்சி எம்பிக்கள் கனடா பிரதமர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்