பெய்ரூட்: இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது மீண்டும் உச்சத்தை அடைந்துள்ள இப்போரில் இருதரப்பிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதும் உயிரிழப்புகள் நிகழ்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் வியாழக்கிழமை(அக்.10) நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் ஒரு எட்டு மாடி குடியிருப்பும், மற்றொரு குடியிருப்பு கட்டடத்தின் தரைத்தளமும் தரைமட்டாகியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஏபி செய்தி நிறுவன புகைப்படக்காரர் கூறினார். குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆராயப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் தளங்கள் அதிகமாக இருப்பதாக கருதப்படும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
ஹிஸ்புல்லா இயக்கத்தின் பாதுகாப்பு உயரதிகாரியான வாஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் முயற்சி தோல்வியில் தான் முடிந்துள்ளது. ஏனெனில், இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் கட்டடங்கள் எதிலும் சஃபா இருக்க வாய்ப்பில்லை என்று ஹில்புல்லாவின் அல் மனார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹி்ஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலின் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் ராக்கெட் உள்ளிட்டவற்றை கொண்டு ஹிஸ்புல்லா இயக்கம் நடத்திவரும் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது.
தெற்கு லெபனானில் அமைதிப் பணிகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. குழுவினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய அதே நாளில், ஹி்ஸ்புல்லாவின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஐ.நா. குழுவினர் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். இஸ்ரேலின் இத்தாக்குதல் பரவலாக கண்டனங்களை பெற்றது. இத்தாக்குதல் தொடர்பாக விளக்கம் கேட்டு, தங்கள் நாட்டுக்கான இஸ்ரேல் தூதருக்கு இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.