இஸ்லாமாபாத்: எல்லையில் தீவிரவாதம், பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை வர்த்தகம், எரிசக்தி புழக்கம், பரஸ்பரம் தொடர்பு ஆகியவற்றை ஊக்குவிக்க முடியாது. பரஸ்பரம் கூட்டு முயற்சியுடன் மட்டுமே வளங்கள், முதலீடு புழக்கத்தை ஊக்குவிக்க முடியும் என்று என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகருக்கு நேற்று சென்றார். அங்கு அவரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் தெற்கு ஆசியாவுக்கான இயக்குநர் ஜெனரல் இல்யாஸ் மெஹ்மூத் நிஜாமி வரவேற்றார். பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஷரீப் அளித்த இரவு விருந்தில் அவர் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 23ஆவது கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,"தற்போதைய காலகட்டத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம்,பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவதே சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். இதில் நேர்மையான உரையாடல்கள், பரஸ்பர நம்பிக்கை, நல்ல நட்புணர்வுடன் கூடிய அண்டைநாடுகள், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆவணத்துக்கான பொறுப்புடைமையை மீண்டும் உறுதி செய்தல் ஆகியவை தேவை. மூன்று தீமைகளுக்கு எதிராக சமரசமின்றி சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுதியோடு திகழ வேண்டும்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் செல்லும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.. எஸ்சிஓ மாநாட்டின் பின்னணி என்ன?
கேள்விக்கு அப்பாற்பட்ட வகையில் அமைதி மற்றும் வலுவுக்கு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தேவையாக இருக்கிறது. சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆவணத்தை உறுதியுடன் தொடர்ந்து நமது பொறுப்புடைமையாக கொள்ளும்போது நமது முயற்சியில் முன்னேற்றம் நேரிடும். ஒருதலைப் பட்சமான கொள்கையாக இல்லாமல் உண்மையான நட்புணர்வின் மூலம் மட்டுமே பரஸ்பரம் ஒத்துழைப்பு கட்டமைக்கப்பட வேண்டும். பரஸ்பரம் மரியாதை, சமத்துவமான இறையாண்மை அடிப்படையிலான ஒத்துழைப்பு நிலவவேண்டும். பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் இறையாண்மைக்கு அங்கீகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும்,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்