ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஒரு கிராமத்தில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 15 பெண்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடும் பணி நடந்து வருவதாக, அந்நாட்டின் போலீசார் செய்தித் தொடர்பாளர் பிரிக். அத்லெண்டா மாதே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் உயிரிழந்தவர்கள் 15 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் எனவும், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கிழக்கு கேப் மாகாணத்தின் லுசிகிசிகி நகரில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசாரால் வெளியிடப்பட்ட வீடியோவில், நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் துப்பாக்கிச் சூடு நடந்ததை காண்பிக்கிறது. ஒரு வீட்டில் 12 பெண்களும், ஒரு ஆணும் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு வீட்டில் மூன்று பெண்களும், ஒரு ஆணும் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்தக் கோரிய பாகிஸ்தான்.. ஐநா சபையில் இந்தியா பதிலடி!
உலகில் மிக அதிக அளவில் மனித கொலைச் சம்பவங்கள் நிகழும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும். துப்பாக்கிச் சூட்டில் பல பேர் கொல்லப்படும் சம்பவங்கள் அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்தும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் அருகாமையில் உள்ள குவாசுலு-நடால் மாகாணத்தில் வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 7 பெண்கள், ஒருவர் சிறுவன் ஆவர். தென்னாப்பிரிக்காவில் கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 45ஆக உள்ளது. இதுவே அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு 6.3 ஆக உள்ளது.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் கொலை விகிதங்கள் ஒரு லட்சம் பேருக்கு ஒன்றாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி வரை ஓராண்டில் தென்னாப்பிரிக்காவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 62 மில்லியன் மக்கள் வசிக்கும் அந்நாட்டில் ஒரு நாளைக்கு 70-க்கும் அதிகமாகும்.
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சட்டங்கள் கண்டிப்பானவை. ஆனால், அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத, பதிவு செய்யப்படாத துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்