பால்டிமோர்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கி பாலத்தின் மீது கடந்த மார்ச் 26ஆம் தேதி அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் பாலம் உடைந்து நீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.
இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்பட்டது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பின்னர் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நீரில் மூழ்கிய 6 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்பட்டது. நீரில் மூழ்கிய நேரம் உள்ளிட்டவைகளை கணக்கிடுகையில் நீரில் மூழ்கியவர்கள் உயிரிழந்து இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர். இதில் இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இருவரும் 35 மற்றும் 26 வயது மதிக்கத் தக்க நபர்கள் என்றும் நீரில் மூழ்கிய பிக் அப் வாகனத்தில் இருந்து இருவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், விபத்தின் போது பாலத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த 6 ஊழியர்களை தொடர்ந்து காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். 6 பேர் அடையாளங்கள் குறித்து போலீசார் தெரிவிக்காத நிலையில் அவர்கள் மெக்சிகோ, கவுதமாலா, ஹோண்டூராஸ், எல் சால்வேடர் ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம் ஆற்றில் மூழ்கிக் கிடந்த பிக் அப் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட இருவரது சடலங்களை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்கும் பணி நடந்து வருவதாக போலீசார் கூறினர். பாலத்தின் மீது மோதிய கப்பல் தளி (Dali) சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த Synergy Marine Group என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது.
சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றி உள்ளனர். முன்னதாக சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் தகவல் தெரிவித்த நிலையில், அதன்படி போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டதால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெபாசிட் தொகையை தவணையில் செலுத்துவதாக கூறிய வேட்பாளர் - தேர்தல் அலுவலரின் நடவடிக்கை என்ன? - Mahendra Orang