ஹைதராபாத்: உலக பதின்ம வயதினரின் மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பதின்ம வயதினர் (Teen Agers) எதிர்கொள்ளும் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பதின்ம வயதினரின் மனநல தினத்தின் நோக்கமாகும்.
உலக பதின்ம வயதினரின் மனநல தினம்: 2020ஆம் ஆண்டில் ஹோலிஸ்டர் என்பவர், பதின்ம வயதினரின் மன ஆரோக்கியத்தைக் கவனிப்பதற்காக, பதின்ம வயதினரின் மனநல தினத்தை அறிமுகப்படுத்தினார். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 2ஆம் தேதி உலக பதின்ம வயதினரின் மனநல தினம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மனநல அறக்கட்டளை அறிக்கை: மனநல அறக்கட்டளை அறிக்கையில், 20 சதவீத மக்கள், தன் பதின்ம வயதில் எந்த ஒரு வருடத்திலும் மனநலம் ரீதியான பிரச்சினைகளை சந்திக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு மனிதன் 50 சதவீத மனநல பிரச்சினைகளை 14 வயதிலும், 75 சதவீத மனநல பிரச்சினைகளை 24 வயதிலும் சந்திக்கின்றனர். 5 முதல் 16 வயதுடைய 10 சதவீத குழந்தைகள் மருத்துவ ரீதியாக கண்டறியக்கூடிய மனநல பிரச்சினைகளை கொண்டிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர்களின் மனநல காரணி: உலக சுகாதார நிறுவனம் இளம் வயதினரிடம் இருக்கக்கூடிய உணர்வு ரீதியான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்கி சோதனை செய்து வருகிறது. மேலும் இளம் வயதினருக்கான மனநல சேவைகள் குறித்தும் வழிகாட்டுகிறது. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் அதாவது 18 முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள் மிகவும் மோசமான மனநிலையை கொண்டுள்ளதாக மனித மூளை மற்றும் மனதிற்கான சேபியன் ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்தியாவின் மனநிலை: இணைய வசதி கொண்ட இளைஞர்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றுகளின் போது நாட்டில் உள்ள இளைஞர்களின் மனநலம் மோசமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டும் இளைஞர்களின் மனநல காரணி (MHQ - Mental Health Quotient) 10 ஆக இருப்பதாகவும், அதே போல் 45 முதல் 54 வயதுடையவர்களின் மனநல காரணி 73 ஆக இருப்பதாகவும், 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் இளைஞர்களின் மனநல காரணி 24 ஆகவும், 45-54 வயதுடையவர்களின் மனநல காரணி 94 ஆகவும் இருப்பதாக சேபியன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனநலம் காக்கும் திட்டங்கள்: இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் மனநலத்தை கண்டறிவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதயா என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள இளம் வயதினரின் மனநலம் உட்பட அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்த்ய காரியக்ரம் என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர் கவனிப்பு அவசியம்: பதின்ம வயது என்பது ஒருவரை திறன்மிக்கவராக மாற்ற கூடிய வயதாகும். அதனால் இந்த வயது பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் கவனம் கொடுக்க வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான தூக்கம், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி அவசியம் என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து பெற்றோர்களும் பின்பற்றுங்கள். உங்கள் குழந்தை மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால் அவர்களை குழந்தை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று மனரீதியான சிகிச்சை அளிக்கலாம்.
இதையும் படிங்க: கைக் குலுக்குதல் மூலம் உடல் நோய்களை கண்டறியலாமா? - ஆய்வு கூறுவது என்ன?