ஹைதராபாத்: ஹார்ட் அட்டக் எனப்படும் மாரடைப்பு, தற்போது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஏற்படுகிறது. மாரடைப்பு திடீரென ஏற்பட்டு ஒருவரைத் தீவிரமான நிலைக்குத் தள்ளுகிறது என்று பலரும் நம்புகிறோம். ஆனால், உண்மையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு 10 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே சில அறிகுறிகள் தோன்றும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதனை சரியாக கவனித்தால் மாரடைப்பைத் தவிர்த்து உயிரை காப்பாற்றலாம் என்கின்றனர். அப்படி, மாரடைப்புக்கு முன் உடலில் ஏற்படும் 6 முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சோர்வு: மாரடைப்பு வருவதற்கு 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை உடல் சோர்வாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், இந்த அறிகுறிகள் ஆண்களை விட பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவானது என 2019ம் ஆண்டில் வெளியான தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்தக் கழகத்தின் இதழில் குறிப்பிட்டுள்ளது.
மார்ப்பு அசெளகரியம்: மாரடைப்புக்கு முன் மார்பைச் சுற்றி அசெளகரியங்கள் ஏற்படுகின்றன. மார்பு இறுக்கமாக, கனமாக உணர்தல், மார்பின் நடுவில் வலி ஏற்படுவது மாரடைப்பிற்கான அறிகுறிகளாக இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வியர்த்தல்: உடலில் வியர்வை ஏற்படுவது சாதரணமாக ஒன்று தான். ஆனால், மாரடைப்பு ஏற்படுவர்களுக்கு முதலில் அதிக வியர்வை ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதயத்திற்கு போதுமான ரத்தம் செல்லாமல் இருக்கும் போது உடலில் அதிகளவு வியர்ப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். கூடுதலாக, சிலர் அஜீரணம் அல்லது குமட்டல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர்.
இதயத் துடிப்பு அதிகரிப்பு: இதயத்திற்கு போதிய ரத்தம் கிடைக்காவிட்டால் இயற்கையாகவே இதயத்துடிப்பு கூடுகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நோயாளிகளின் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.
உடல் வலி: மாரடைப்புக்கு சில நாட்களுக்கு முன் தோன்றும் முக்கிய அறிகுறிகளில் ஒன்று உடல் வலி. மார்பு, தோள்பட்டை, கை, முதுகு, கழுத்து, தாடை போன்ற பகுதிகளில் வலி இருப்பதாக நோயாளி கூறினார். உண்மையில், இதயம் தொடர்பான பிரச்னை ஏற்படும் போது, தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் வலி ஏற்படுகிறது.
அடிக்கடி தலைசுற்றல்: காரணமின்றி தலைசுற்றல் ஏற்பட்டால், அதனை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தலைசுற்றல், தலைவலி, மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, குறைந்த ரத்த அழுத்தம் இவை அனைத்தும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவர் விளக்குகிறார்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.