சென்னை: இது குறித்து தகவல் அளித்துள்ள ஆராய்ச்சியாளர் சுரேஷ் குச்சிப்புடி, கடந்த 2020ஆம் ஆண்டு பறவைகளிடம் கண்டறியப்பட்ட எச்5என்1 (H5N1), தற்போது கால்நடைகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மிகக் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தொற்றிடம் இருந்து மனிதக் குலம் எப்படி மீளப்போகிறது என்பது சவாலான காரியம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நோயின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளும் அளவுக்கு, மனிதர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறதா என்பதே கேள்விக் குறிதான் எனவும் சுரேஷ் குச்சிப்புடி கூறியுள்ளார்.
இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ள நியூயார்க் போஸ்ட், இந்த தொற்று மனிதர்கள் மத்தியில் பரவும் சூழலில் கொரோனாவை விட உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் எனவும், இதன் அறிகுறிகள் தொடர் காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், தலைவலி உள்ளிட்ட பொதுவானவை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த நோய் மற்றும் அதற்கான தடுப்பு மருந்து கண்டறிதல், கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள், மருந்துகள் உள்ளிட்டவை கண்டறிவதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காண்பித்து வருவதாகவும் நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.
அது மட்டும் இன்றி, தடுப்பூசிகளுக்கான மருந்துத் துறை ஆலோசகரான ஜான் ஃபுல்டனுடன், மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்கள் பலர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், அவர் இந்த நோய் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததாக சுரேஷ் குச்சிப்புடி வெளியிட்ட தகவலை நியூயார்க் போஸ்ட் அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள விவசாயி மற்றும் கால்நடை வளர்ப்பாளருக்கு எச்5என்1 (H5N1) கண்டறியப்பட்ட நிலையில், ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அந்த நபர் கால்நடைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவைகளிடம் இருந்து இந்த தொற்று அவருக்குப் பரவி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதற்கட்ட பணிகளில் அமெரிக்கா ஈடுபடத் தொடங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் அளித்துள்ளதையும் நியூயார்க் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவுப்பழக்க வழக்கத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளாவிடில் எதிர்காலத்தைக் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளிடம் இருந்து காப்பாற்றுவது கடினம் என்பதே உண்மை நிலவரம்.
இதையும் படிங்க: "என் உடல் என் உரிமை" கருணைக்கொலையை.. ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - Euthanasia Needs A Clear Solution