- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: உலக அளவில் மருத்துவதுறை அதிநவீன முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அதற்கு எந்த வகையிலும் குறைச்சல் இல்லாமல் இந்திய மருத்துவத்துறையும் ஈடுகட்டி வளர்ச்சிபெற்று வருகிறது. அந்த வகையில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், மேற்கு வங்கத்தை சேர்ந்த 51 வயது பெண்ணுக்கு வயிற்றுறை மேற்பரப்பு புற்றுநோய்கான ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை கடந்த ஆண்டு மேற்கொண்டுள்ளது. இந்த சிகிச்சை மூலம் பூரண குணம் அடைந்த அந்த பெண் மணி மீண்டும் உடல்நல பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.
இந்த பரிசோதனையில் முழுமையாக ஒரு ஆண்டுகள் நிறைவுற்றும் அவருக்கு எவ்வித புற்றுநோய் தொற்று பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்போலோ கேன்சர் சென்டரின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மற்றும் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை துறையின் மருத்துவர் அஜித் பை, பொதுவாக குடல் புற்றுநோய் மற்றும் அதன் தொடர்சியாக இதன் பரவல் பக்கத்தில் உள்ள உறுப்புகளையும் பாதிக்கும்.
இதற்கு முழுமையான ஓப்பன் சர்ஜரி தேவைப்படும். ஆனால் இந்த பெண்ணுக்கு ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் 6 மணி நேரத்தில் புற்று கட்டிகள் அகற்றப்பட்டது என தெரிவித்தார். மேலும், ரோபோட்டிக் சர்ஜரி மூலம் அனைத்து நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாது என தெரிவித்த மருத்துவர், ஓப்பன் சர்ஜரியை விட ரோபோட்டிக் சர்ஜரி அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளும் எனவும் இதனால் இந்த சிகிச்சை அனைவருக்கும் பொதுவான பயனளிக்கக் கூடியது அல்ல எனவும் கூறினார். இந்த பெண்ணுக்கு புற்று பரவல் என்பது அபென்டிக்ஸ் மற்றும் பெல்விஸ் பகுதியில் மட்டும் இருந்ததால் மட்டுமே இந்த ரோபோட்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது என அவர் விளக்கம் அளித்தார்.
நான்கு புற்றுநோய் நோயாளிகள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியான விளைவுகளையும், அறிகுறிகளையும் புற்று கிருமிகள் ஏற்படுத்தும் எனக்கூறிய மருத்துவர், நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே கேன்சர் சென்டர்களை அணுகி பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிகிச்சை சிறந்த முறை பலனளிக்கும் எனவும் கூறினார்.
குடல் புற்றுநோய் இருந்தால் அவர்களுக்கு வயிற்று உப்புசம், மலம் கழிப்பதில் சிரமம், மலத்தில் ரத்தம் கலந்து வருதல் போன்ற பல அறிகுறிகள் இருக்கலாம். இது இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஒரு முழு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், சிகிச்சை வழங்கி அதை முழுமையாக சரி செய்வது எளிமை எனவும் பலர் புற்றுநோய் முற்றியப்பிறகே இங்கு வருகை தருவதாகவும் கூறினார்.
ரோபோட்டிக் சர்ஜரியை பொருத்தவரை மில்லி மீட்டர் அளவில் துளைகள் போடப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலையில், ரத்த இழப்பு, வலி உள்ளிட்ட ஓபன் சர்ஜரியின் பாதிப்புகள் வெகுவாக குறைக்கப்படும் எனவும், நோயாளி விரைவில் குணமடைய முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்த பெண்ணை பொருத்தவரை 5 செ.மீ அளவு கீறல் போடப்பட்டு, வெற்றிகரமாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. மேலும், அறுவை சிகிச்சை நிறைவுற்று ஒரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர் மீண்டும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகாமல் நலமுடன் இருக்கிறார்" எனவும் அவர் கூறினார்.
மேலும், இந்த காலகட்டத்தில் வாழ்வியல் நடைமுறை மற்றும் உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு என்பது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக கூறிய மருத்துவர் அஜித் பை, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: எச்.ஐ.வி மற்றும் பிறப்புறுப்பு தொற்றைக் கட்டுப்படுத்துமா மென்சுரல் கப்: ஆய்வு கூறுவது என்ன? - Why To Use Menstrual Cup