சென்னை: "டீ" இந்த வார்த்தை பலருக்குப் போதை.., பல கிலோ மீட்டர் வரை பயணித்து ஒரு டீ குடிப்பதற்காகச் செல்பவர்களைப் பார்த்திருப்போம். கேட்டால் "அந்த கட டீ மாறி வருமா"? எனக்கூறுவார்கள். நண்பர்கள் கூட்டம் போட்டாலும் சரி, வீடுகளில் நல்லது, கெட்டது என அனைத்திற்கும் முன்னால் நிற்பது டீ தான்.
இங்குப் பலர் டீ இல்லாமல் உயிர் வாழ முடியாது என்ற அளவு அதற்கு அடிமையாகவும் உள்ளனர். இப்படிப் பல பெருமை மிக்க டீ-யில் சாதா டீ, மசாலா டீ, லெமன் டீ, புதினா டீ எனப் பல வெரைட்டிகளில் டீ வந்துவிட்டது.
என்னதான் நாம் மசாலா டீ போட்டாலும் அந்த சுவை வர மாட்டேங்குதே... என்ன செய்யலாம் எனப் பலரும் யோசிக்கலாம். அது ஒவ்வொருவரின் கை பக்குவம் எனவும் கூறலாம். ஆனால் மசாலா டீ- யை கீழே குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் தயார் செய்து குடித்துப் பாருங்கள் கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும்.
இதையும் படிங்க: "சமைத்த உணவு" குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா? கூடாதா? - Cooked Food In Refrigerator
தேவையான பொருட்கள்
- 2 அல்லது 3 கிராம்பு
- 1/2 அல்லது 3/4 துண்டு பட்டை
- 4 ஏலக்காய்
- 2 மிளகு
- இஞ்சி ஒரு சிறிய துண்டு
- 1 1/2 கப் தண்ணீர்
- 1 கப் கொழுப்பு நீக்கப்படாத பால்
- 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரை
- 3 அல்லது 4 டீ Bags, டீ தூளாக இருந்தால் 2 முதல் 3 ஸ்பூன்
செய்முறை: முன்பு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மசாலா பொருட்களையும் இடித்து ஒரு தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு, 1 1/2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் நன்றாகச் சூடான பிறகு ஏற்கனவே பொடித்து வைத்த மசாலா பொருட்கள் மற்றும் தட்டி வைத்த இஞ்சி துண்டுகளைப் போட்டு நன்றாக வேக வைக்கவும்.
பிறகு அதில் டீ Bag-கை போட்டு 2 மற்றும் 3 நிமிடங்கள் வரை விட்டு விடவும். அதனைத் தொடர்ந்து அதில் சர்க்கரையைப் போட்டுக் கொதித்தவுடன் பாலை ஊற்றவும். பாலுடன் அந்த மாசாலா கலந்த தண்ணீர் நன்றாக வேக மீடியம் ஃபிளேமில் கொதிக்கவிடவும் கடைசியில் தேவைப்பட்டால் புதினா இலைகளைச் சேர்த்து வடி கட்டி நன்றாக ஒரு ஆத்து ஆத்தி சூட்டுடன் குடிக்க வேண்டியதுதான்.
இதையும் படிங்க: "பழைய சோறு" இப்படி செய்து சாப்பிடா இரட்டிப்பான பலன் கிடைக்குமா? - How To Make Perfect Fermented Rice