சென்னை: என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியலையே என்று புலம்புவோருக்கு மத்தியில், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறேன், உடம்பு ஏறவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. உங்கள் உடல் எடையை அதிகரிப்பது அல்லது உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையைக் குறைப்பது போல எளிதான காரியம் கிடையாது.
என்ன தான் சாப்பிட்டாலும் சிலர் மரபு(ஜீன்) காரணமாக ஒல்லியாகவே இருப்பார்கள். வளர்சிதை மாற்றத்தின்படி, அவர்கள் உட்கொள்வதைத் காட்டிலும் அதிகமான எனர்ஜி வெளியேறிக்கொண்டிருக்கும். இதனால், என்ன சாப்பிட்டாலும் சிலருக்கு வெயிட் அதிகரிக்காது.
இப்படியான சூழலில் தான் நீங்கள் கூடுதலாகவும் பொறுமையாகவும் சற்று அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஆரோக்கியமாகச் சாப்பிட்டாலும், ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலும் வெயிட் அதிகரிக்கப் போவது இல்லை என நினைத்து ஜங்க் ஃபுட்-ஐ நோக்கி ஒரு குழு படையெடுக்க ஆரம்பிக்கும். அது தான் தவறான செயல் என்கிறது அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏஜிங் (National Institute Of Aging) என்கிற மருத்துவ ஆய்வு.
இயற்கையாக, ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க என்ன செய்யலாம்: பட்டர் ஃபுரூட் (Avacado), பீனட் பட்டர் (Peanut Butter) போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளைத் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் அதிகமான சத்துக்களும் கார்போஹைட்ரேட் அடங்கி இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு வாழைப்பழம் வரப்பிரசாதமாக அமைகிறது. தினமும் காலையில் பால் அல்லது தயிருடன் வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வாழைப்பழம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் ஹான்சாஜீ யோகெண்ட்ரா.
சாதம்: எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அரிசியில் உடல் எடையை அதிகரிப்பதற்கான அனைத்து சத்துக்களும் உள்ளது. பட்டை தீட்டப்பட்ட அரிசியை (Polished Rice) விடப் பட்டை தீட்டப்படாத அரிசியை (Unpolished Rice) உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். காரணம், பட்டை தீட்டப்படாத அரிசியில் நார்ச் சத்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு நாளில் இரு வேளை, உணவில் பருப்பு வகைகளுடன் சாதத்தை எடுத்துக் கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு: மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உருளைக்கிழங்கு கொழுப்பு திசுக்களை அதிகரிக்க உதவுகிறது. தினசரி 100 கிராம் உருளைக்கிழங்கு வரை மனிதன் எடுத்துக் கொள்ளலாம். அதே போல, சக்கரவள்ளி கிழங்கில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உணவில் அதையும் சேர்த்து கொள்ளலாம்.
கொண்டைக் கடலை: புரதச்சத்துக்கள் நிறைந்துள்ள கொண்டைக்கடலையை எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிப்பதை விரைவில் காண முடிகிறது. இதில் இருக்கும் புரதச்சத்துக்கள் அடர் தசைகளை உருவாக்க உதவியாக இருப்பதோடு இதயம் சார்ந்த நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது.
ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதால், மற்ற நேரங்களில் பசியின்மையை நீங்கள் உணரலாம். அதனால், நீங்கள் சாப்பிடும் உணவை 6 வேளையாக பிரித்துச் சாப்பிடுவதால் விரைவில் முன்னேற்றம் காணலாம். நட்ஸ், உலர் திராட்சை போன்றவற்றைத் தின்பண்டங்களாக அசை போடுங்கள். குறிப்பாக, உணவை உண்ணும் போது மகிழ்ச்சியாக எடுத்து கொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.