ஐதராபாத்: தினசரி வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் தலைவலி ஏற்பட்டாலே அனைத்து வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து படுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், இரண்டு மூன்று நாளைக்கு தொடரும் மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி வந்தால் என்ன செய்வது?.
பொதுவாக, பருவமடையும் வயதில் தொடங்கும் இந்த மைக்ரேன் தலைவலிப்பிரச்சனை ஆண்களை விட பெண்களையே அதிகமாக பாதிக்கிறது. சாதாரண தலைவலியைப்போல இல்லாமல் வாந்தி, குமட்டலுடன் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட தலைவலியை எவ்வாறு தடுக்கலாம் என்றால், மைக்ரேன் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற முதலில் உணவுப் பழக்கத்தில் சில மாற்றஙகளைச் செய்ய வேண்டும் என்கிறார் பிரபல உணவியல் நிபுணர் ஸ்ரீலதா. பழங்கள்,காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலமாகவும் பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் உணவுகள், அதிக சர்க்கரை மற்றும் காஃபின்(Caffine) பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் தலைவலியை தவிர்ககலாம் என பரிந்துரைக்கிறார்.
உணவே மருந்து: காலை உணவை தவிர்ப்பது என்பது தலைவலிக்கு பிடித்தமான ஒன்று என்கிறார் மருத்துவர். குறிப்பாக, ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் காலையில் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். சாதாரணமாகவே, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருந்தால் தலைவலி எட்டிப் பார்க்கும் நிலையில் மைக்ரேன் பிரச்சனை உள்ளவர்களுக்கு கூடுதலாக எரிச்சலை தூண்டி கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கிறது.
சாப்பிட வேண்டிய உணவுகள்: மீன், பருப்பு மற்றும் விதைகள் போன்ற உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் ஒற்றை தலைவலியை தவிர்க்கிறது. குறிப்பாக, ஒற்றை தலைவலி உடையவர்கள் அதிகமான தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், தானியங்களையும், மெக்னீசியம் நிறைந்த பச்சை காய்கறிகள், பாதாம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவதன் மூலம் ஒற்றை தலைவலியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர்.
சாப்பிட கூடாத உணவுகள்: பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நன்மையை அளித்தாலும், தக்காளி, அத்திப்பழம் போன்ற சில உணவுகள் தலைவலியை தூண்டுவதாக இருக்கிறது. ஆகையால், உண்ணும் உணவின் குணத்தை அறிந்து உட்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, மைக்ரேன் உள்ளவர்களுக்கு எதிரியாக இருப்பது தயிர் மோர் போன்ற பால் பொருட்கள்.எனவே, இவற்றை உணவு முறையிலிருந்து நீக்கப்பட வேண்டும். மது பானங்கள், காஃபின் நிறைந்த பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டியை சாப்பிடுவதால் 35% பேருக்கு ஒற்றை தலைவலி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு சொல்வது என்ன?: ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒமேகா 3 உள்ள மீன் வகைகளை, அதாவது நெத்திலி,மத்தி,கானாங்கெளுத்தி,கெண்டை போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பயனடைகிறார்கள். உணவு முறையை சீர் செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் தலைவலியின் தீவுரம் குறைகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
இதையும் படிங்க: டிராகன் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? இனி, வாங்கி சாப்பிடுங்க! |