சென்னை: காலையில் அரசரைப் போன்றும், மதியம் இளவரசரைப் போன்றும், இரவில் யாசகனைப் போன்றும் உணவு உண்ண வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் தலைகீழாக, காலையில் உணவைக் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிக உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் முறைக்கு மாறியுள்ளனர்.
பொதுவாக இரவு நேரத்தில் உணவு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் நூடுல்ஸ், மைதா கொண்டு தயாரிக்கப் படும் உணவுகள், அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய் உள்ள உணவுகளைத் தவிர்த்து, எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால், அஜீரணக் கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்
தயிர்: தயிர் உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை உண்டாகும். ஆனால், இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் தயிர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், தயிர் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தித் தூக்கத்தைக் கெடுக்கும். எனவே, குளிர்ச்சித் தன்மை கொண்ட தயிரைக் காலத்திற்கு ஏற்ற வகையில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.
தக்காளி: அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் தக்காளியில் அதிகளவில் இருப்பதால் அவை பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இரவு நேரங்களில் தக்காளி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
வெங்காயம்: வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிஃப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும். வெங்காயம் குளிர்ச்சி என்பதால் இரவில் தவிர்ப்பது நல்லது.
ஐஸ்கிரீம்: இரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இதனால் தூங்குவதற்குச் சிரமம் ஏற்படுகிறது. ஐஸ்கிரீமில் அதிகளவில் கலோரிகள், கொழுப்புகள், சர்க்கரைகள் உள்ளன. இவற்றை இரவில் உட்கொள்வதால் உடல் பருமன், மந்தமான உணர்வு, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் பல் சிறைவு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
மது அருந்துதல்: இரவில் மது அருந்துவது அதிக சிறுநீர் கழிக்கத் தூண்டும். இதனால் அடிக்கடி எழுந்துகொள்ள நேரிடும். வழக்கமான தூக்க முறையில் இடையூறு ஏற்படுவதால் நிம்மதியாகத் தூங்கி எழ முடியாத நிலை உண்டாகிறது. முறையான தூக்கமின்மையினால் உடல் சோர்வு, தலைவலி போன்றவை ஏற்படும்.
பழங்கள்: ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் சிட்ரஸ் உள்ளது. இவற்றை இரவில் உட்கொள்வது நெஞ்செரிச்சலை அதிகரிக்கிறது. எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களைத் தவிர்ப்பது நல்லது.
காரமான உணவுகள்: இந்திய உணவுகள் பெரும்பாலும் காரம் நிறைந்ததாகவே இருக்கும். உணவில் அதிகப்படியான காரம் தூங்கும் திறனைக் குறைக்கிறது. இரவில் காரம் அதிகமாக இருக்கும் உணவுகள் அதிகம் உட்கொள்ளும்போது, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து, வயிற்றுப் புண்கள் உண்டாகும். அதிகப்படியான காரத்தை உணவுகளில் சேர்ப்பதினால் செரிமான பிரச்சினை ஏற்படுகிறது.
இனிப்பான உணவுகள்: அதிக சர்க்கரை உள்ள உணவு அல்லது தானியங்களை உட்கொள்வது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அல்லது குறைக்கும். இரவு உணவுக்குப் பிறகு சிறிது இனிப்புகளைச் சாப்பிட விரும்பினால், டார்க் சாக்லேட்டை உண்ண வேண்டாம். ஏனென்றால், இதில் சிறிது அளவு காஃபினும் உள்ளது.