டெல்லி: நீங்கள் மீன் விரும்பி உண்பவராக இருந்தால், கார்சினோஜென் பார்மலினில் (carcinogen formalin) வேதிப்பொருளில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீன் போன்ற கடல் உணவுப் பொருட்கள் புதிதுபோல இருப்பதற்காக சேர்க்கப்படும் கார்சினோஜென் பார்மலின் மனிதனின் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சிகே பிர்லா மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகரான மருத்துவர் மோஹித் கிர்பத் கூரும்போது, "மீன்களைப் பாதுகாப்பதில் பொதுவாக தவறாகப் பயன்படுத்தப்படும் பார்மலின் என்ற நச்சு ரசாயனம், கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக சிறுநீரகங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பார்மலின் என்பது தண்ணீரில் கரைந்த பார்மால்டிஹைட் வாயுவாலான ரசாயனம் ஆகும். மேலும், உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு தற்போதைய சூழலில் அதிகமாக உள்ளது. இது மனித ஆரோக்கியத்தில் அதிகப்படியான தீங்குகளை விளைவிக்கும்.
பார்மலினில் உள்ள மூலப்பொருளான பார்மால்டிஹைடு மற்றும் அதில் இருந்து வெளிப்படும் பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் இரைப்பை குடல் வழியாக உறிஞ்சப்பட்டு, வீக்கம் மற்றும் பலவீனமான சிறுநீரக செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது" என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், போர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உள்ள சிறுநீரகவியல் துறையின் மூத்த இயக்குநர் டாக்டர் சலில் ஜெயின் இதுகுறித்து கூறியபோது, "பார்மலின் பயன்பாடு சிறுநீரக செயலிழப்பு, சுவாச பிரச்சினைகள் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மீன்களை புதிதுபோல வைத்திருக்க அம்மோனியா பார்மலின் மாத்திரைகளை பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளிப்படும் ரசாயனம் மீன்களின் சதைகளில் பரவி, அதை நச்சுத்தன்மைமிக்கதாக மாற்றுகிறது. உணவின் மூலம் பார்மலின் மனித உடலில் கலப்பதால் சிறுநீரக செயலிழப்பு, சுவாச பிரச்சனைகள் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்" என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:மனஅழுத்தத்திலிருந்து மனிதனை விடுவிக்குமா இசை? - ஆய்வில் வெளிவந்த அசத்தலான தகவல்!