ஹைதராபாத்: வீட்டில் பாகற்காய் சமையல் என்றால் போதும், பெருசுகள் முதல் இளசுகளின் முகம் முக்கோணத்திற்கும் சென்று விட்டு வரும். காரணம், அதன் கசப்பு சுவை. புற்றுநோயை எதிர்த்து போராடுவது முதல் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்வது வரை பாகற்காய் பல நன்மைகளை நமக்கு செய்தாலும் அதன் மீது பலர் வெறுப்பையே காட்டுகின்றனர்.
எப்படியாவது வீட்டில் உள்ளவர்களை பாகற்காய் சாப்பிட வைக்க வேண்டும் என இனி நீங்கள் போராட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தாலே போதும். இதுவரை பிடிக்காதவர்கள் கூட தங்களது உணவில் பாகற்காயை சேர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.
- கரடுமுரடான பகுதியை நீக்குங்கள்: நீங்கள் அடுத்தமுறை பாகற்காய் சமைக்கும் போது, பாகற்காய் மேற்பரப்பில் உள்ள கரடுமுரடான பகுதியை பீலர் மூலம் முடிந்த வரை நீக்கிவிடுங்கள். காரணம், கசப்பு தன்மை இந்த மேற்பரப்பில் தான் அதிகமாக இருக்கிறது.
- விதைகளை அகற்றுங்கள்: பாகற்காயின் மேற்பரப்பை நீக்கிய பிறகு அதை உங்களுக்கு தேவையான அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுள் இருக்கும் பெரிய விதைகளை நீக்கிவிடுங்கள். இந்த விதைகள் கசப்பு தன்மையை தருவதற்கான வாய்ப்பு உள்ளது. இப்போது, விதைகளை நீக்கி சமைத்து பாருங்கள் கசப்பு கணிசமாக குறைந்திருப்பதை காணலாம்.
- உப்பு மற்றும் மஞ்சள்: உப்புவிற்கு இயற்கையாகவே கசப்பு தன்மையை நீக்குவதற்கான தன்மை உள்ளது. ஆகையால், நறுக்கி வைத்த பாகற்காய் மீது இரண்டு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூவி அனைத்து பகுதியிலும் படுகிற அளவிற்கு நன்கு கலந்து விடுங்கள்.
இப்படி, அரை மணி நேரம் வைத்திருந்து, ஊற வைத்த பாகற்காயை நன்றாக பிழிந்து சாற்றை எடுத்து விடுங்கள். பிறகு அதை ஓடுகின்ற தண்ணீரில் கழுவி சமையலில் சேர்த்தால் பாகற்காயில் உள்ள கசப்பு முற்றிலுமாக போய்விடும்.
- மோர்/புளியில் ஊற வைக்கவும்: நறுக்கிய பாகற்காயை சமைப்பதற்கு முன் மோர் அல்லது புளி தண்ணீரில் ஊற வைக்கலாம். இரண்டிலும் உள்ள புளிப்பு சுவை கசப்பு தன்மையை போக்க உதவி செய்கிறது.
- வெல்லம் அல்லது சர்க்கரை: இனிப்பு தன்மை கசப்பை குறைக்க உதவுகிறது. பாகற்காயை வறுவலாக செய்யும் போது சிறுது சர்க்கரையை சேர்த்து வதக்குங்கள். குழம்பாக செய்ய வேண்டும் என நினைத்தால், கடைசியில் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- இது தவிர..சமைப்பதற்கு முன், நறுக்கிய பாகற்காயை உப்பு கலந்த தண்ணீரில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேகவைத்தால் உதவியாக இருக்கிறது.
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மற்றும் தொற்றுகளை அகற்றுகிறது
- நீரிழிவு நோயிற்கு சிறந்த உணவு
- சீறுநீரக கற்களை நீக்குகிறது
- இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது
- புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- கல்லீரல் நச்சுக்களை அகற்றுகிறது