சென்னை: தினசரி குறைந்தபட்சம் 4,000 ஸ்டெப்ஸ் நடந்தால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என்கிறது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெட்ரோ எஃப்.கார்சியாவால் 2023-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. ஒரு நாளைக்கு 10,000 அடிகள் (Steps) நடந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும் என பலரும் சொல்லி நாம் கேட்டிருக்கலாம். அதை கடைபிடிக்கவும் நாம் முயற்சித்திருப்போம்.
ஆனால், அதில் எந்த அளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது? அனைத்து வயதினரும் கட்டாயமாக தினசரி 10,000 அடிகள் நடக்க வேண்டுமா? என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நவீன காலத்தை நோக்கிச் செல்லும் இந்த உலகத்தில், நமது வாழ்க்கையும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறது.
அதில் முக்கியமாக, உடற்பயிற்சி அற்ற வாழ்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கங்கள். இதில், உடலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நீண்ட நாட்களுக்கு பலன் தரக்கூடிய உடற்பயிற்சியான வாக்கிங் செல்வதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் தினசரி 10,000 அடிகள் நடப்பதால் சொல்ல முடியாத அளவிற்கு பயன்பெறுகின்றனர் என்கின்றனர் பெரும்பான்மையான உட்சுரப்பியல் நிபுணர்கள் (Endocrinologists). நடைபயிற்சி இதய நோய்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு, மூளை பக்கவாதம், உடல் பருமன், மார்பக புற்றுநோய் மற்றும் மனச்சோர்வை தடுக்கிறது என்கின்றனர்.
10,000 ஸ்டெப்ஸ் கட்டாயமா? தினசரி 10,000 அடிகள் நடப்பது என்பது சுமார் 8 கி.மீ நடப்பதற்குச் சமமானது. இது, காலை படுக்கையை விட்டு எழுந்ததில் இருந்து இரவு தூங்க மீண்டும் படுக்கைக்குச் செல்லும் வரையிலான கடைசி அடிகளும் இதில் அடங்கும் என்கின்றனர். ஆனால், நமது பணிச் சூழலில் இது சாத்தியமானதா என்று கேட்டால் இல்லை.
ஆகையால், தினசரி காலை ஒரு மணி நேரம் வாக்கிங் செல்ல வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் விளையாடுவதே போதுமானது.
எந்த வயதுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
- 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினசரி 12 ஆயிரம் அடிகள் நடப்பது நல்லது.
- 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 ஆயிரம் அடிகள் நடப்பதை இலக்காக கொள்ளலாம்.
- 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் 10 ஆயிரம் அடிகள் நடப்பதால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
- 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 8 ஆயிரம் அடிகளை இலக்காக வைக்க வேண்டும்.
- 18 முதல் 50 வயதில் இருக்கும் ஆண்கள் தினசரி 12 ஆயிரம் அடிகள் நடக்க முயற்சிக்கலாம்.
- 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 11 ஆயிரம் அடிகள் நடக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
இதையும் படிங்க: நடைபயிற்சி செய்யும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க..!