ஹைதராபாத்: மனிதர்களின் வாழ்வியல் மாற்றம், உணவுப் பழக்கம், போதைப் பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 14.61 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, 2025இல் 15.7 லட்சமாக உயரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களை அச்சுறுத்தும் மார்பக புற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஹினா கான் (Hina Khan): இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. முன்னதாக, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஹினா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், விரைவில் மீண்டு வருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. ஹினா கான் முன்பாக மார்பக புற்றுநோயுடன் போராடி, வெற்றி கண்ட சில பிரபலங்களும் உள்ளனர். அந்த வகையில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி மீண்டு வந்த இந்திய நடிகைகளை குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
தஹிரா காஷ்யப் (Tahira Kashyap): எழுத்தாளரும், இயக்குநரும், பாலிவுட் நடிகருமான ஆயுஷ்மான் குரானா-வின் மனைவியுமான தஹிரா காஷ்யப் கடந்த 2018ஆம் ஆண்டு 0 மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை எண்ணி துவளாத தஹிரா, உலகெங்கிலும் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை ஊக்குவிக்கும் வகையில், ‘மை எக்ஸ் ப்ரெஸ்ட்’ என்ற போட்காஸ்ட் ஒன்றை தொடங்கினார்.
7 எபிசோட் உள்ள அந்த போட்காஸ்ட்டில், புற்றுநோயை எதிர்த்து போராடுவது, அந்நேரத்தில் தன்னுடைய மனநலம், இதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார். இது மட்டுமல்லாமல், முடி இருந்தால் தான் அழகு என்ற மாயையை உடைத்து, மொட்டை தலை, உடலில் உள்ள வடுக்கள் உள்ளிட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோயில் இருந்து முற்றிலுமாக மீண்டு வந்தார்.
பார்பரா மோரி (Barbara Mori): மெக்ஸிக்கன் நடிகையான இவர், இந்தியில் ஹிருத்திக் ரோஷனுடன் கைட்ஸ் (Kites) என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது 46 வயதான இவர், தனது 29வது வயதில் ஒன்றாம் நிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு விரைவாக குணமடைந்தார்.
மேலும் மார்பக புற்றுநோய் குறித்தும், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கை முறை, நோயறிதல், சிகிச்சை உள்ளிட்ட கட்டங்களை உள்ளடக்கிய ‘1 நிமிடம்’ என்ற ஆவணப்படத்தில் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மஹிமா சௌத்ரி (Mahima Chowdhury): பாலிவுட் நடிகையான மஹிமா சௌத்ரி, நடிகர் ஷாருக்கானுடன் அவர் நடித்த பர்தேஸ் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இந்த நிலையில், இந்தாண்டின் தொடக்கத்தில் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பாலிவுட் பிரபல நடிகரும், தமிழில் விஐபி, கனெக்ட், லிட்டில் ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபம் கெர், மஹிமா சௌத்ரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.
பிரபலமான பத்திரிகைக்கு பேட்டியளித்த மஹிமா, வருடாந்திர சுகாதாரப் பரிசோதனையின் மூலம் தனக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், கீமோதெரபி மூலம் மருத்துவம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் வேதனையான காலகட்டங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அவர் புற்றுநோயில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.
மும்தாஜ் (Mumtaz): பிரபல பாலிவுட் மூத்த நடிகை மும்தாஜ் 1970ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ள அவர், கடந்த 2002ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 54 வயது. 6 கீமோதெரபி மற்றும் 35 கதிர்வீச்சு சிகிச்சைகளுக்குப் பிறகு மார்பக புற்றுநோய்க்கு எதிரான போரில் வென்றார். ஒரு பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மும்தாஜ், தான் ஒரு உற்சாகமான போராளி, தோல்வியை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டேன். மரணம் கூட தன்னுடன் போராட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
சாவி மிட்டல் (Chhavi Mittal): இந்தி நடிகையும், தயாரிப்பாளருமான சாவிமிட்டலுக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின் லம்பெக்டமி என்ற மார்பக அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார். மேலும், அவர் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
ஹம்சா நந்தினி (Hamsa Nandini): ருத்ரமாதேவி மற்றும் ஜெய் லவ குசா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினிக்கு, 2021ஆம் ஆண்டு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார். விக் இல்லாமல் ஒரு விளம்பரத்தில் நடித்தார்.
கௌதமி (Gautami): தென்னிந்திய நடிகையான கௌதமி, 1991ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தி ஆக்ட்ரஸ் பவுண்ட் திலைப் அகைன் (The actress found the Life Again) என்ற அறக்கட்டளை மூலம், புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: 'சன்னி லியோனின் இமேஜ் இனி மாறும்' - நடிகை பிரியாமணி கூறுவது என்ன? - SUNNY LEONE New MOVIE