சென்னை: 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், லான்செட் பிளானட்டரி ஹெல்த் (Lancet Planetary Health) என்னும் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, தற்போது இந்தியாவில் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காற்றின் தர அளவிற்கு கீழே உள்ள காற்று மாசுபாடு கூட தினசரி இறப்பு விகிதங்களை அதிகரிக்க வழிவகுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இறப்பு விகிதம்: அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா, வாரணாசி ஆகிய 10 இந்திய நகரங்களில், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 33,000 மரணங்கள், உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த அளவுகளைவிட அதிகமாக இருக்கும் காற்று மாசுபாட்டின் காரணமாக நடப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
அதிக காற்று மாசுபாடு இல்லாத நகரங்களாகக் கருதப்படும் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கூட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் ஆய்வாளர் 10 நகரங்களில் ஏற்படும் PM 2.5 (2.5 மைக்ரோ அளவிலான துகள்கள்) காற்று மாசுபாட்டின் அளவு மற்றும் 2008 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தினசரி இறப்பு விகிதம் போன்ற தரவுகளைப் பயன்படுத்தி இந்த முடிவிற்கு வந்துள்ளார்.
மாசு ஆய்வு: இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் ஆரோக்கியம் பற்றிய புரிதலில் இந்த ஆய்வு புதிய பார்வையை அளிக்கிறது. இந்தியாவில் குறுகிய கால காற்று மாசுபாடு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை மதிப்பிட்ட முதல் பல்-நகர ஆய்வு இதுவாகும். இந்த பத்து நகரங்களும் வெவ்வேறு பரப்பில் வேறுபட்ட அளவிலான காற்று மாசுபாட்டு செறிவுகளை உள்ளடக்கியது மற்றும் பல்வேறு வேளாண்-காலநிலை மண்டலங்களில் அமைந்துள்ளது.
காற்று மாசுபாட்டின் உள்ளூர் மூலங்களான கழிவுகளை எரித்தல் மற்றும் வாகன உமிழ்வு போன்றவற்றின் தாக்கத்தை ஆய்வு செய்யும் புதிய உருவக (modelling) நுட்பங்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகரங்களிலும் (மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்றவை) மற்றும் இந்தியாவில் முன்னர் ஆய்வு செய்யப்படாத குறைந்த காற்று மாசுபாட்டு செறிவுகளில் ஏற்படும் இறப்பு சார்ந்த மதிப்பீடுகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய காற்று மாசுபாட்டு தர வரம்புகள் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வு இந்தியா (Sustainable Futures Collaborative, அசோகா பல்கலைக்கழகம், Centre for Chronic Disease Control), ஸ்வீடன் (கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்), அமெரிக்கா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பாஸ்டன் பல்கலைக்கழகம்) மற்றும் பிற நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. அவர்களில் பலர் CHAIR-India கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
உயிர்கொல்லியாக செயல்படும் காற்று மாசுபாடு: இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளில், இந்த ஆய்வுக் காலத்தில், குறிப்பிட்ட இந்த 10 நகரங்களில் உள்ள அனைத்து இறப்புகளில் 7.2 சதவீதம் (ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 33,000) உலக சுகதார அமைப்பினால் நிர்ணயித்த பாதுகாப்பு வரம்பான 15 μg/m3 ஐ விட அதிகமாக இருக்கும் குறுகிய கால PM 2.5 துகள்களை சுவாசிப்பதால் நிகழ்கிறது.
குறுகிய கால PM 2.5 துகள்களை சுவாசிப்பதில் ஒவ்வொரு 10 μg/m3 அதிகரிப்பும் தினசரி இறப்புகளில் 1.42 சதவீதம் அதிகரிக்கிறது. காற்று மாசுபாட்டின் உள்ளூர் மூலங்களின் தாக்கத்தை தனிமைப்படுத்தி ஆய்வு செய்யும் உருவக மாதிரி அணுகுமுறையைப் பயன்படுத்தியபோது இந்த மதிப்பீடு கிட்டத்தட்ட இருமடங்காகி 3.57 சதவீதமாக இருந்தது.
இறப்பு அபாயத்தின் அதிகரிப்புகள் PM 2.5 இன் குறைந்த செறிவுகளில் செங்குத்தாகவும், அதிக செறிவுகளில் குறைந்தும் காணப்பட்டன. 24 மணிநேர காற்று மாசுக்கான தற்போதைய தேசிய சராசரி காற்றுத் தர வரம்பான 60 μg/m3க்குக் கீழேயும் குறிப்பிடத்தக்க விளைவுகள் காணப்படுகின்றன. மொத்தத்தில், இந்த ஆய்வானது கொள்கை முடிவுகளுக்கான முக்கிய அடிப்படை அறிவினை கொண்டுள்ளது.
காற்று மாசுக் கொள்கையானது தற்போதைய இந்தியத் தர வரம்பை அடையத் தவறிய 'அடையா நகரங்களில்' (non-attainment cities) கவனம் செலுத்துகிறது. ஆனால் இந்திய தரநிலைகள் தற்போதைய WHO-வின் தரநிலை மதிப்பு 15 μg/m3ஐ விட நான்கு மடங்கு (4X) அதிகமாக இருப்பதால், இந்த அடையா நகரங்களுக்கு அப்பால் உள்ள பல பகுதிகளில் உள்ளவர்களும் காற்று மாசினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் தான். தற்போதைய அடையா நகரங்களுக்கு அப்பால் தீர்வு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?: கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் மூத்த-முனைவர் பட்ட ஆய்வாளரும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான முனைவர். ஜெரோன் டி போன்ட், இந்தியாவின் இந்த முதல் பல்-நகர ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் 2008 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் தோராயமாக 7.2% தினசரி PM 2.5 துகள்களை சுவாசிப்பதால் ஏற்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களை எங்கள் ஆய்வு முன்வைக்கின்றது.
காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வரும் இந்த நேரத்தில், சிதறிய உள்ளூர் மாசுபாட்டு மூலங்களுக்கு தீர்வு காண்பது தற்போதுள்ள உத்திகளுள் முக்கியமானதாகிறது என்று அவர் கூறினார்.
"இந்த தனித்துவமான ஆய்வு 10 இந்திய நகரங்களில் வேறுபடும் காற்றின் தர விவரத்தை கணக்கிட்டுள்ளது. மேலும் குறைந்த அளவிலான காற்று மாசுபாட்டிலும்கூட இறப்பு ஆபத்து குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்பதை முதல்முறையாக இந்த ஆய்வு நிரூபிக்கிறது.
தற்போது 'அடையா நகரங்களில்' மட்டுமே கவனம் செலுத்தும் நமது காற்றின் தர மேலாண்மை உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசரத் தேவையை இவ்வாய்வு தெரிவிக்கிறது. குறைந்த ஆபத்து வரம்புகளைக் கணக்கிடும் வண்ணம் தற்போதைய காற்றின் தர வரம்புகளை மறுபரிசீலனை செய்யவேண்டும். மேலும் மனித ஆரோக்கியத்தை திறம்பட பாதுகாக்க பிராந்திய மூலங்களில் இருந்து உள்ளூர் மூலங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.” என்று CHART (Centre for Health Analytics Research and Trends) மையத்தின் இயக்குநர், CHAIR-இந்தியா கூட்டமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிரறிவியல் துறையை சார்ந்த முனைவர். பூர்ணிமா பிரபாகரன் கூறினார்.
ஆய்வின் இணை ஆசிரியரான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோயல் ஸ்வார்ட்ஸ் கூறுகையில், “இந்திய காற்றின் தர வரம்பை குறைத்து அமல்படுத்துவது ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும். மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளன, அவை வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவை இந்தியாவில் உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.” என்று கூறினார்.
புற்றுநோய்க்கு வழிவகுக்கிறதா காற்று மாசுபாடு?: "காற்று மாசுபாட்டால் நேரடியாக பாதிக்கப்படுவது நுரையீரல் (Lungs). குறிப்பாக, காற்று மாசுபாட்டில் உள்ள துகள்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் விளைவுகளை அளிக்கிறது. தொழிற்சாலைகளை சுற்றி வசிக்கும் மக்கள் மற்றும் அங்கு பணிபுரியும் மக்களின் நுரையீரல் விரைவாக சுருக்கம் அடைகிறது. இறுதியாக, புகைப்பிடித்தல் போன்றவற்றால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் காலம் மாறி, காற்று மாசுபாடு நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது" என்கிறார் எஸ் ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் சிந்து.
தற்காத்து கொள்வது எப்படி?: "மனிதர்களுக்கும் காற்றுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதால் 100 சதவீதம் தற்காப்புக்கு வாய்ப்புகள் இல்லை. முடிந்த அளவிற்கு வெளியே செல்வதை தவிர்ப்பது, வெளியே செல்லும் இடங்களில் என்-95 மாஸ் அணிந்து கொள்வது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளால் காற்று மாசுபாடு பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்" என்றும் மருத்துவர் சிந்து அறிவுறுத்துகிறார்.