சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் இரண்டு நபர்கள் சந்திக்கும் போது கைக்குலுக்கிக்கொள்வது இயல்பான செயலாகும். இது மரியாதையின் வெளிப்பாடாலும் இந்த கைக்குலுக்கலின் மூலம் ஒருவர் ஆதிக்கம் மிகுந்தவரா?, மென்மையான குணமுடையவரா?, அதிகாரம் செலுத்துபவரா?, பணிவுள்ளவரா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் ஒருவரது கைக்குலுக்கலின் வலிமையை (Hand Grip Strength) வைத்து அவரின் ஆரோக்கியத்தை கணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கைகளால் சேகரிக்கும் அல்லது மேற்கொள்ளும் அதாவது, கனமான மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்துச் செல்வது, தேன் ஜாடியை திறப்பது போன்றவற்றில் நாம் வெளிப்படுத்தும் சக்தியின் அளவு, உடல் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
கைக்குலுக்கலின் வலிமை (Hand Grip Strength) ஒட்டு மொத்த உடலின் ஆரோக்கியத்தை காட்டுக்கிறது. குறைந்த அல்லது பலம் குறைந்த கைக்குலுக்கல், உடலின் செல்கள் வேகமாக முதிர்ச்சியாவதைக் குறிக்கிறது. சமீபத்தில் ஆரோக்கியம், மக்கள் தொகை மற்றும் ஊட்டச்சத்து இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில், கைக்குலுக்கல் ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நீரிழிவு நோய், இருதய நோய், பக்கவாதம், நாள்பட்ட சிறுநீரக நோய், சில புற்றுநோய்கள், பலவீனமான எலும்புகள், சார்கோபீனியா, நாள்பட்ட கல்லீரல் நோய் போன்றவை குறைந்த வலிமையுடைய கைக்குலுக்கலுடன் (low Hand Grip Strength) தொடர்புடையது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் கைக்குலுக்கல் ஆரோக்கியத்தின் முக்கியமான பயோமார்க்கர் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் இதில் பல்வேறு உடல்நலப்பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கைக்குலுக்கல் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை ஜமர் டைனமோமீட்டர் (Jamar dynamometer) எனப்படும் எளிய கைப்பிடி சாதனம் மூலம் அளவிடலாம். கைக்குலுக்கலின் தன்மை வலிமையாக இருக்க வேண்டுமெனில் முதலில் நமது தசை வலிமையாக இருக்க வேண்டும்.
தசை பலவீனமாக இருந்தால், நீரிழிவு நோய்கள், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நோய்கள் குணமடைவதற்கு தாமதமாகலாம். எனவே தசை ஆரோக்கியத்தை பரிசோதிப்பதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியின் செயல் தலைவரும் இயக்குநருமான மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறியுள்ளார். பலவீனமான தசைகள் மட்டுமே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம்.
கைக்குலுக்கலின் வலிமையை அளவிடுவது, நோய் தடுப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது உடல்நல பிரச்சினைகளை கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க வழிவகுக்கும் எனவும் மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறியுள்ளார். மேலும் கைக்குலுக்கலின் வலிமை மற்றும் நோய்களுக்கான தொடர்பை மதிப்பிடுவதற்கான ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவர் மிஸ்ரா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நல்ல தூக்கத்திற்கு பாதங்களை கழுவ வேண்டுமா? - நிபுணர்களின் கருத்து என்ன?