கலிபோர்னியா : 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை (மார்ச்.11) அதிகாலை 4.30 மணிக்கு ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்குகிறது. சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் இந்த விழாவில் கலந்து கொள்ள திரைப்பிரபலங்கள் கலிபோர்னியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சியை 4வது முறையாக பிரபல தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்க உள்ளார். ஏபிசி தொலைக்காட்சியில் வழக்கமாக ஆஸ்கர் விருது விழா லைவ் செய்யப்படும் நிலையில், இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலம் ஆஸ்கர் விருது விழாவை லைவ் ஸ்ட்ரீமிங்கில் ரசிகர்கள் கண்டு ரசிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் அதிகபட்சமாக 13 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. சிறந்த இயக்குநர் பிரிவில் கிறிஸ்டோபர் நோலன் போட்டியிடும் நிலையில், அவருக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் 8 பிரிவுகளில் பார்பி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆங்கில படங்களை தவிர்த்து இரண்டு வேறு மொழிப் படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் தேர்வாகி உள்ளது. 13 பிரிவுகளில் ஓபன்ஹெய்மர் படம் தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில், பெரும்பாலும் 8 விருதுகள் வரை வெல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான விருதையும், ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வெல்லக் கூடும் எனக் கூறப்படுகிறது. அதிகாலை 4 மணியளவில் ரெட் கார்ப்பெட் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடங்கி விடும் நிலையில், விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்குத் தான் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : டோன்ட் ஓரி.. டோன்ட் ஒரிடா மச்சி.. - விஷாலின் 'ரத்னம்' படத்தின் புதிய அப்டேட்!