சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியைத் தொடங்கினார். இதனையடுத்து, இக்கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக விஜய் தெரிவித்தார். மேலும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். தவெக கட்சி பாடல் வெளியான போது பேசுபொருளானது.
மேலும், தவெகவின் முதல் மாநில மாநாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் விஜய் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அனுமதி கோரினார்.
இதற்கு விழுப்புரம் காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்தது. இருப்பினும், மாநாடு தேதியில் மாற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து வரும் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மாநிலம் முழுவதும் சென்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான பூமி பூஜை வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி அன்று நடக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'தளபதி 69' அப்டேட்... விஜய்க்கு மீண்டும் ஜோடியான பூஜா ஹெக்டே! - pooja hegde in thalapathy 69
அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பூமி பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு நடத்துவதற்கான இடமான விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையை தயார் செய்வதற்கான பணிகளும், அன்று முதல் தொடங்குவதாக கூறப்படுகிறது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் தவெக மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர், தொண்டர், வழக்கறிஞர் உள்ளிட்ட 10 அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் மாநாடு என்பதால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.