சென்னை: குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். தற்போது இவரது இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா (Maharaja). தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தற்போது மகாராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது 50ஆவது படத்தை நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி, அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் சலூன் கடையில் பணியாற்றும் நபராக நடித்துள்ள விஜய் சேதுபதியின், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த படத்தின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மகாராஜா திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரங்கு பொம்மை திரைப்படம் நித்திலனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததுடன் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றது.
நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றிகளை கொடுக்காத நிலையில், மகாராஜா திரைப்படம் எப்படி இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தமிழ் திரைப்படங்களில் சப்போர்ட்டிவ் வேடங்களில் நடித்து, பின்னர் நாயகனாக மாறிய விஜய் சேதுபதி தனது தனித்துவமான நடிப்பால் தவிர்க்க முடியாத நடிகராக உருமாறினார். அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வில்லன் வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக, அட்லி இயக்கிய 'ஜவான்' படத்தில் மிரட்டினார்.
தமிழிலும் நாயகனாக மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும், நட்புக்காகவும் என நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு, சமீபத்திய படங்கள் எதுவும் வெற்றியை தராத நிலையில், மகாராஜா படத்தை மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.