சென்னை: பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், இவானா, பாரதிராஜா, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கள்வன்'. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஜிவி பிரகாஷ் குமார், இவானா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, "பாலா சமூக சேவகர். புயல், வெள்ளம் எதுவாக இருந்தாலும் முதலில் வந்து விடுவார், அவருக்கு எனது பாராட்டுகள். நடிகை இவானா எதார்த்தமான அழகு. நடிகை இவானாவுக்கு இப்படம் லவ் டுடே படத்திற்கு மேல் வெற்றி அடைந்து பாராட்டைக் கொடுக்க வேண்டும். மேலும் சின்ன இயக்குநர்களுக்கு படம் கொடுத்து, அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது ஜிவி பிரகாஷ் மட்டும் தான்" என்று பேசினார்.
பின்னர் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “ஜிவி ரொம்ப அழகா நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் தனுஷ் நடித்த அளவிற்கு உண்மையாக இருக்கிறது. இந்த பெண் யார் அழகா இருக்கிறதே என்று கேட்கும் அளவுக்கு, படத்தில் இருவரின் ஜோடி நன்றாக உள்ளது.
பாரதிராஜா மிகப்பெரிய முன் உதாரணம், அவருடன் பேசும் போது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். பாரதிராஜாவுக்கு அருகில் அமரும் அளவுக்கு தகுதியுள்ளவர் வெற்றிமாறன் தான். ஏற்கனவே, பிரபல இயக்குநர் ஷங்கர் ஒருவர் இருக்கும் போது, இப்பட இயக்குநர் ஷங்கர் என்று பெயர் வைப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்” என்றார்.
பின்னர் தொகுப்பாளர் KPY பாலா பேசும் போது ஜிவி பிரகாஷ் சார் எப்படி நடிகரா ஆவார் என்று சொன்னீர்களோ, அதேபோல் எனக்கும் சொல்லுங்கள் நடிகரா மாற வேண்டும் என்று கூறினார். உடனே, இயக்குநர் லிங்குசாமி மற்றும் வெற்றிமாறன் இருவருமே சேர்ந்து, விரைவில் நீயும் ஹீரோவாக வருவாய் எனவும், இதேபோன்று தான் சிவகார்த்திகேயனுக்கு நடந்தது என்று கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “மேடையில் இருக்கும் அனைவரும் சாதனையாளர் தான். பாரதிராஜாவிற்கு விழா எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கான நேரம் வரவில்லை, நிச்சயம் விரைவில் அவருக்கு மிகப்பெரிய விழா எடுப்போம்.
மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை, எத்தனையோ இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் இறந்த பிறகு உயரிய விருதுகள் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருக்கும் போதே அந்த விருதுகளை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத படைப்பாளியின் பிதாமகன் என்றால், அது பாரதிராஜா தான். சினிமாத் துறையின் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து மத்திய அரசு இமயத்திற்கு உயரிய விருது கொடுப்பதற்கு முன்பு, நாம் அதை விட பெரிய விருதைக் கொடுப்போம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "கள்வன் படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது படம் பார்க்க ஆர்வமாக உள்ளது. படத்தில் இருவரின் ஜோடி நன்றாக இருந்தது. விடுதலை படத்திற்கு படப்பிடிப்பு நடத்திய இடத்தில் தான் கள்வன் படமும் எடுத்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரியை விட தீனாக்கும், ஜிவிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்றவர், எந்த நேரமாக இருந்தாலும் ஜிவி பிரகாஷை தொலைபேசியில் அழைத்து பேசலாம் அந்த உரிமையை கொடுத்துள்ளார்.
பாரதிராஜா எந்த படத்தில் பொய்யாக நடித்தது இல்லை, ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பவர். யானையை வைத்து படம் எடுத்தாலும், டைனோசரை வைத்து எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நன்றாக இருந்தால் நன்றாக வரும்” என்றார். அதன்பிறகு, ஈடிவி பாரத் தரப்பில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று கேட்ட போது, இன்னும் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு இருக்கிறது அதன் பிறகு தான் வெளியாகும்” என்று தெரிவித்தார்.
கள்வன் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு பேசுகையில், "இந்த படம் எனக்கு ஒரு மிகப்பெரிய பயணம். சின்ன படமாக இருந்தாலும், பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் வேலை செய்துள்ளனர். வெற்றிமாறன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளது மிகப்பெரிய சந்தோஷம். இயக்குநர் பாரதிராஜாவின் பயோபிக் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள், அப்படி எடுத்தால் அதை வெற்றிமாறனுக்கு கொடுக்க வேண்டும். அதேபோல், அதை தயாரிக்கும் பொறுப்பு எங்கள் நிறுவனத்துக்கு வந்தால், கண்டிப்பாக கண்ணை மூடிக்கொண்டு செய்வேன்" என்றார்.
இதனையடுத்து நடிகை இவானா பேசுகையில், "ஜிவி பிரகாஷுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம். இந்த படத்தில் ஜிவி எனக்கு நல்ல நண்பராகிவிட்டார். என் அப்பாவுக்கு இந்த படத்தில் வரும் கட்டழகு பாடல் ரொம்ப பிடிக்கும், எப்போதும் காரில் இதே பாடல் தான் ஓடிக்கொண்டு இருக்கும். கள்வன் ஒரு வித்தியாசமான கிராமப் படமாக இருந்தது" என்றார்.
பின்னர் பேசிய நடிகர் ஜிவி பிரகாஷ், “படத்தில் நடிகராக பாரதிராஜா தான் நடித்திருக்கிறார். நானும், தீனாவும் அவருக்கு வில்லனாக தான் நடித்து இருப்போம். பாரதிராஜாவுடன் நடித்த நாட்களை பொக்கிஷமாக வைத்துக் கொள்வேன். சிறந்த நடிகருக்கான விருதை இந்த படத்தின் மூலம் பாரதிராஜா வாங்குவார். 6 வருடமாக இந்த படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது படம் வெளி வரப்போகிறது” என்று பேசினார்.
இதையும் படிங்க: "என்ட சேட்டன் சேச்சிமாரே" - கேரளாவில் மீண்டும் மாஸ் காட்டிய விஜய்.. வைரலாகும் செஃல்பி வீடியோ! - Actor Vijay