சென்னை: சினிமா ஆர்வலர்களுக்கு பேரதிர்ச்சியாக சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அசோக் நகரில் அமைந்துள்ள உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பி செல்லும் திரையரங்குகளில் ஒன்றாக விளங்கியது உதயம் திரையரங்கம்.
உதயம் திரையரங்கம் உதயம், உதயம் மினி, சந்திரன், சூரியன் என நான்கு திரைகளை கொண்டு இயங்கியது. சென்னையில் அதிகம் மக்கள் புழங்கும் பகுதியில் ஒன்றான அசோக் நகரில் அமைந்தாலும், குறைந்த விலையில் டிக்கெட் விற்கப்பட்டதாலே அதிக மக்களை ஈர்த்தது. பின்னர் சென்னையில் பல்வேறு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் புதிய தொழில்நுட்பங்களுடன் தோன்றிய நிலையில் உதயம் திரையரங்கம் காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யாததால் மக்கள் வரவு குறைந்தது.
இதனால் உதயம் திரையரங்க உரிமையாளர் திரையரங்கத்தை முன்னணி கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். உதயம் திரையரங்கம் உள்ள இடத்தில் அலுவலகங்கள் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு அமையப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் பழமை வாய்ந்த திரையரங்குகளான அபிராமி, தேவி ஆகியவை மூடப்பட்ட நிலையில் தற்போது உதயம் திரையரங்கம் மூடப்படுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!