சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (பிப்.15) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் வெளி மாநில அவுட்டோர் யூனிட் பயன்படுத்தி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சிவகார்த்திகேயன் படத்தில் வெளி மாநில அவுட்டோர் யூனிட்களை பயன்படுத்துவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி, உள்ளூர் அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் இன்று முதல் திரைப்படத்திற்கும், சீரியல்களுக்கும் அவுட்டோர் யூனிட் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் பாதிக்கப்படும் சூழல் உருவானது. மேலும், தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வெளிமாநில யூனிட்களை பயன்படுத்துவது இல்லை என்று முடிவெடுத்ததாகவும், தற்போது அதை சிலர் மீறி வருவதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அவுட்டோர் யூனிட் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி உடன், அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு நள்ளிரவில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அப்போது, பிற மாநிலங்களில் நடைபெறும் படப்பிடிப்புகளில் தமிழ் பணியாளர்களை வேலை செய்ய அனுமதிப்பது இல்லை என்றும், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அனைத்து மாநிலப் பணியாளர்களும் வேலை செய்கிறார்கள் என்றும், அவர்கள் தங்களது ஆதங்கத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவரிடம் வெளிப்படுத்தினர்.
தமிழ்ப் படங்களுக்கு தமிழ் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று பெப்சி உடன் ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், பெப்சியும் இதன் முழு விவரம் அறியாமல் வெளி மாநில அவுட்டோர் யூனிட்டுக்கு தமிழ் பணியாளர்களை அனுப்பியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் சில நாட்களில் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும், எனவே போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, இன்று அனைத்து திரைப்பட படப்பிடிப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அவுட்டோர் யூனிட் சங்கம் எழுதிய கடிதத்தில், “ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு வெளி மாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்துவதால், எங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி உள்ளூர் அவுட் டோர் யூனிட் சங்கத்தினர் இன்று முதல் எந்தவித படப்பிடிப்புகளுக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் திரைப்பட நிறுவனத்தால் தயாரிக்கும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டைரக்டர் AR முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சுதிப், சுந்தர்ராஜன் ஆகியோர் பணிபுரியும் இத்தமிழ் திரைப்படத்துக்கு தாஹிர் (Taher) எனும் வெளி மாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்துவதால், வெளி மாநில அவுட்டோர் யூனிட்டுகளை தமிழ் திரைப்படங்களுக்கு பயன்படுத்துவதில்லை என பல கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், ஏற்கனவே தாங்கள் அறிவித்துள்ளீர்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
அதோடு, மேற்படி பேச்சுவார்த்தையை மீறி வெளி மாநில அவுட்டோர் யூனிட்டை, மேற்படி தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்துவதால், எங்களது அவுட்டோர் யூனிட் உரிமையாளர்களுக்கு மிகுந்த உளைச்சல் மற்றும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, பிப்.16 முதல் எந்தவித படப்பிடிப்புக்கும், சீரியல் படப்பிடிப்புக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என எங்களது அவசர பொதுக்குழு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, இங்குள்ள அவுட்டோர் யூனிட்டுகளின் தொழில் நலன் காக்க, ஒரு நிரந்தரத் தீர்வுக்கு வழிவகை செய்யுமாறு தங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: #SK21 படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு - தைரியமா? வீரமா? படக்குழு சூசகம்!