சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து படங்களை இயக்கினார். தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா என்ற மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுமட்டும் அல்லாது இந்த படம் 1,000 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல நாட்களாக கங்குவா படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்து. மேலும், சூர்யா இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்திருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் தகவல்கள் உலாவி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சூர்யா கங்குவா படத்தில் தனது படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்துவிட்டதாகவும், இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு நன்றி தெரிவித்தும், "அனைத்து நினைவுகளுக்கும் நன்றி கங்குவா மிகவும் ஸ்பெஷலான ஒன்று" என தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் செக்கேண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் சூர்யா நிகழ்காலத்தில் இருப்பது போன்ற கெட்டப்பிலும், முந்தைய காலத்தில் இருப்பது போன்ற மற்றொரு கெட்டப்பிலும் காட்சியளித்தார். இந்த போஸ்டர் சூர்யா ரசிகர்களின் மத்தியில் கங்குவா திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
மேலும், கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தப்படத்தில் சூர்யா நடித்துள்ள காட்சிகளுக்கான டப்பிங் பணியைத் தொடங்கிவிட்டதாக கங்குவா திரைப்பட குழுவினர் சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது இந்த படத்தில் புதுமையான மொழி பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், டப்பிங் பணியின் போது பாடலாசிரியர் மதன் கார்க்கி உடன் இருப்பது போன்ற புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஏற்கனவே 'பாகுபலி' படத்தில் காலகேயர்கள் என்ற கதாபாத்திரங்கள் பேசக்குடிய 'கிளிகிலி மொழி' எனப்படும் புதுமையான மொழியை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாராக மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படம் வெளியாகி தமிழ் சினிமாவின் போக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: காதல் துணையை கரம் பிடித்த ரகுல் பிரீத் சிங்! கோவாவில் கோலாகல திருமணம்!