சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வின் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், இதனால் கட்டடப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, 40 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேலும் 25 கோடி ரூபாய் கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்பட்டது. அதற்கு நடிகர் சங்கம் சார்பில் வங்கிக் கடன் பெறுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 12.5 கோடி ரூபாய்க்கு வைப்புத்தொகை கட்டினால், வங்கி 30 கோடி ரூபாய் கடனாகத் தர தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அதற்காக நடிகர் சங்கம் சார்பில் நிதி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை கமல்ஹாசன், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ம்ற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 1 கோடி ரூபாய் நிதி அளித்த நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த வருமானத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டிடப் பணிகளை தொடர்வதற்காக, சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது லட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் எம்.நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்.
அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நேற்று மீண்டும் பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “த்ரிஷா.. த்ரிஷா..” ஈரோடு ரசிகர்களால் ஸ்தம்பித்த படக்குழு! - Trisha Viral Video