ஐதராபாத் : நடிகர் சித்தார்த்துக்கும் நடிகை அதிதி ராவுக்கும் தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபூர் ரங்கநாயகஸ்வாமி கோயிலில் ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த 2021 ஆண்டு வெளியான மஹா சமுத்ரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாக நீண்ட நாட்களாக இருவரும் லிவ் இன் டூகெதரில் வாழ்ந்து வந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது. இது குறித்து செய்திகள் தீயாக பரவிய போது இருவரும் பேசாமல் மறுத்து வந்தனர்.
இதனிடையே இருவரும் இணைந்து உள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இருவரும் ஒரே காரில் வந்ததன் மூலம் இருவருக்குள்ளான காதல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை அதிதி ராவின் தாத்தா தான் வனபர்த்தி சமஸ்தானத்தின் கடைசி ராஜாவாகும். அங்குள்ள கோயில்களுடன் அதிதி ராவின் குடும்பத்திற்கு நெருக்கமான உறவு உள்ளது என்பதால் வனபர்த்தியில் வைத்து திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. மேலும், 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலில் இருவரும் பாரம்பரிய முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக நடிகர் சித்தார்த் தமிழ்நாட்டில் இருந்து புரோகிதர்களை அழைத்து சென்றதாக தெரிகிறது. திருமணம் குறித்து இருவரும் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இருவரது திருமணத்திற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சித்தார்த் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் 2020ஆம் ஆண்டு கரோனா காரணமாக தள்ளிப்போனது. தொடந்து பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
முன்னதாக நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், நடிகை அதிதி ராவும், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் காந்தி டாக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்..! 'ஜரகண்டி ஜரகண்டி'.. கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியீடு - Jaragandi Released Song