சென்னை: டி.கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக, வி.துரைராஜ் தயாரிப்பில், ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் பைரி (Byri). இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி அன்று வெளியாகவுள்ள நிலையில், பைரி திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பைரி திரைப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
பைரி திரைப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி பேசும்போது, "பைரி என்பது ஒரு வகை கழுகு இனம். அதாவது, புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம்தான் பைரி. இந்த புறா பந்தய கதைக்களம் என்பது என் வாழ்வில் நான் பார்த்து வளர்ந்த, வாழ்வியல் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. குறும்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே, கேமராமேன் வசந்த் எனக்கு பழக்கம்.
என் குறும்படத்திலேயே உழைப்பைக் கொட்டி வேலை செய்திருப்பார். அவர்தான் இப்படத்தின் ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். இப்படம் உருவாவதற்கு அவர் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. எடிட்டிங் சதீஷ் செய்திருக்கிறார். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்தே சதீஷ் பழக்கம். தடம் புகழ் அருண் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் சையது சகோதரர். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்து அவர் எனக்கு பழக்கம். அவரால்தான் இப்படம் நடந்தது. அவருக்கு நன்றி. பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாமல் படத்திற்கு பேருதவியாக இருந்து வரும் தயாரிப்பாளருக்கும் என் நன்றிகள்.
அதற்கு அடுத்ததாக, இன்று இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முழு முதற்காரணம் சக்தி சார்தான். அனைவருமே படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று பாராட்டினாலும், யாரும் அதை வாங்கி வெளியிட முன்வரவில்லை. எந்த விதமான சப்போர்ட்டும் கிடைக்காமல் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுதுதான் சக்திவேலன் இப்படத்தைப் பார்த்தார்.
புது இயக்குநர், புது டீம், ஆடியன்ஸுக்கு பரிச்சயமான நடிகர் நடிகைகள் இல்லை என்றெல்லாம் யோசிக்காமல், இப்படத்தை வாங்க அவர் முன் வந்ததால்தான், இன்று எங்களுக்கு இப்படி ஒரு ப்ளாட்பார்ம் கிடைத்திருக்கிறது. படம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். நீங்களும் படம் பார்க்கும்போது அதை உணருவீர்கள் என நம்புகிறேன்.
படத்தில் 950 சிஜி ஷாட்கள் இருக்கின்றன. 4 நிமிடத்திற்கு ரூ.75 லட்சம் செலவாகும் என்றனர். ஆனால்ம் சிஜி சேகர் 35 நிமிடத்திற்கு சிஜி ஷாட்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில், மிகச் சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பது சிறப்பு. அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை.
கார்த்திக் பிரசன்னா, கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அவருக்கு நன்றி. மனோபன் முதலில் பாடல் ஆசிரியராகத்தான் உள்ளே வந்தார். பின்னர், படத்தில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூஷர் ஆக மாறினார். பத்து ஆட்கள் செய்யக்கூடிய வேலையை, ஒற்றை ஆளாக செய்து காட்டினார். வசந்த் அண்ணன், சதீஷ், மனோபன், சிஜி ரமேஷ் இந்த 4 பேரும் இப்படத்திற்கு மிக முக்கியம்" எனத் தெரிவித்தார்.
சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது, "நான் இப்படத்திற்கு அடையாளம் கொடுக்கவில்லை. பைரி திரைப்படம்தான் எங்கள் சக்தி ஃபிலிம் பேக்டரிக்கு அடையாளமாக மாற இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறேன். கண்டிப்பாக இந்த ஆண்டிற்கான வெற்றிப் படங்கள் மற்றும் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால், அதில் கண்டிப்பாக 'பைரி' இருக்கும். 15 வருடமாக கஷ்டப்பட்ட அத்தனை பேரும் சேர்ந்து ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கின்றனர். பைரி படத்தின் வெற்றியை சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்" உற்சாகமாகப் பேசினார்.