சென்னை: சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் டீசர் வரவேற்பை பெற்று வருகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபிஷான் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, மிதுன் ஜெய் சங்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist family). ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டு வருகிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் செய்துள்ளார்.
இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டீசர் நேற்று வெளியானது முதல் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் கணவன், மனைவியான சசிகுமார் மற்றும் சிம்ரன் தங்களது இரு மகன்களுடன் இரவு நேரத்தில் வீட்டை காலி செய்து ஊரை விட்டு ஓடுவதற்கு தயாராகிறார். அதற்கு நடுவில் நடக்கும் காட்சிகள் நகைச்சுவையான வசனங்களுடன் கலகலப்பாக உள்ளது.
இந்த படத்தில் வசனங்கள் இலங்கை தமிழில் பேசப்படுகிறது. சசிகுமார் கடைசியாக நந்தன், அயோத்தி என இரண்டு படங்கள் சிரியஸான கதையில் நடித்த நிலையில், இந்த படத்தில் காமெடி ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த டீசரில் சிம்ரன் மற்றும் இரு மகன்கள் செய்யும் காமெடி வரவேற்பை பெறுகிறது. சென்ற வருடம் ’குட் நைட்’ படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’புஷ்பா 2’ இரண்டு நாட்களில் 400 கோடி; வாயைப் பிளக்க வைக்கும் வசூல் சாதனை!
டூரிஸ்ட் ஃபேமிலி டீசர் நேற்று வெளியானது முதல் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் குட் நைட் திரைப்படம் போல நல்ல ஃபீல் குட் படமாக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.