சென்னை: தமிழ்நாடு இயக்குநர் சங்கத்திற்கு வரும் 16ஆம் தேதி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், ஆர்கே செல்வமணி தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, ஆர்கே செல்வமணி தலைவரானார். வெற்றி பெற்ற அணியில் ஆர்வி உதயகுமார் செயலாளராகவும், பேரரசு பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், இப்போது உள்ள நிர்வாகிகள் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தலைவர் பதவிக்கு இந்த முறை போட்டியிடப்போவது இல்லை என்று ஆர்கே செல்வமணி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பழைய நிர்வாகிகளை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராததால், செயலாளராக இருந்த ஆர்வி உதயகுமார் தலைவராகவும், பேரரசு செயலாளராகவும், இயக்குநர் சரண் பொருளாளராகவும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணைச் செயலாளர்களாக சுந்தர்.C, A.வெங்கடேஷ், எழில் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதி இருக்கும் இணைச் செயலாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டும் வருகிற 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தம் 2,600 பேர் உறுப்பினர்களாக உள்ள இந்த சங்கத்தில், இரண்டாயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இதில் உதவி இயக்குநர்களும் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். ஆனால், படம் இயக்கி இருந்தால் மட்டுமே இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்.. ஓடிடி ரிலீஸ் எப்போது?