சென்னை: மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பின்பு வசூல் ரீதியாகவும், வாய் மொழி மூலமாக நன்றாக உள்ளதாகவும் பேச்சு பரவியது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபத்தி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது.
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் டி.ஜே.ஞானவேல் படத்தில் ரஜினி நடிக்கிறாரா என ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளுடன் கூடிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இது ரஜினியின் கமர்ஷியல் படமாக இருக்குமா என எதிர்பார்ப்புக்கு மத்தியில் மனசிலாயோ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து வேட்டையன் திரைப்பட டிரெய்லர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக வேட்டையன் பட ரிலீஸ் முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு சற்று குறைவாக இருந்தது. பின்னர் ஆயுத பூஜை விடுமுறை மற்றும் படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனம் காரணமாக வசூல் சாதனை படைத்துள்ளது. பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை வேட்டையன் திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் இந்திய அளவில் 122.10 கோடியும், உலக அளவில் 187.10 கோடியும் வசூல் செய்துள்ளது.
இந்திய அளவில் படம் வெளியான முதல் நாளில் 31.7 கோடி வசூல் செய்த வேட்டையன் திரைப்படம், இரண்டாவது நாளில் 24 கோடியும், 3வது நாளில் 26.75 கோடியும், 4வது நாளில் 22.3 கோடியும் வசூல் செய்துள்ளது. வேட்டையன் திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் தமிழ் மொழியில் மட்டும் 91.85 கோடி வசூல் செய்துள்ளது.
இதையும் படிங்க: "சீமானை பற்றி பேச வேண்டாம்" - கோபமடைந்த தேசிய தலைவர் படத்தின் நடிகர்!
அதே போல் தெலுங்கில் 10.4 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 4 நாட்களில் 75 கோடியும், அடுத்ததாக கர்நாடகாவில் 16.95 கோடியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா சேர்த்து 13.45 கோடியும் வசூல் செய்துள்ளது. வரும் வாரங்களில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் வேட்டையன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்